மருத்துவ மேற்படிப்பு : அரசாணை ரத்து!

Published On:

| By Balaji

மருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காகத் தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்திப் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் சேர, தொலை தூரப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

2018- 19ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகள், தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என வகைப்படுத்தி, கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரவின் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் சென்றடைய இயலாத பகுதிகளையே எளிதில் அணுக முடியாத, தொலைதூர பகுதிகளாக அறிவிக்க வேண்டுமே தவிர, மருத்துவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அறிவிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் புவியியல் ரீதியாக அடையாளம் காணப்படவில்லை என கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார் .

இதேபோல, கிராமப்புறங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சுதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், 2000ஆம் ஆண்டு மருத்துவ கல்வி விதிகளின் படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share