ஜெ. திருந்தவே மாட்டார்!: வைகோ அறிக்கை

Published On:

| By Balaji

விருத்தாசலத்தில் நடந்த ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தில் நெரிசல், வெயில் காரணமாக இருவர் பலியானார்கள். இதைக்கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, நேற்று விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றிய பிரச்சாரக் கூட்டத்தில், நான்குபேர் உயிரிழந்தனர் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தப் பொதுக்கூட்டத்தில், தாகத்தால் தவித்த பெண்கள் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று கெஞ்சியபோதும் தண்ணீர் தரவில்லை. வெயிலின் உக்கிரம் அதிகமாகி அனலாக தகிக்கத் தொடங்கியது. நெருப்பில் போட்டு வாட்டுவதைப் போலத்தான், உச்சிவெயிலில் உட்காரவைத்து வாட்டி வதைத்தனர். ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகச் சொல்வதுண்டு. அந்த அரக்க குணம்கொண்ட நீரோவுக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்? அவர் மனதில் மனிதாபிமானமோ, இரக்கமோ எள்ளளவும் இல்லை. யார் அவதியுற்றாலும் அதைத் தடுக்கத்துடிப்பதுதான் தாய்க்குணம். ஆனால், தமிழ்நாட்டில் ‘அம்மா’ என்ற சொல்லை இரக்கம் அற்ற கொடுங்குணத்துக்கும், எவரையும் மிரட்டித் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி காணும் வக்கிரத்துக்கும் இலக்கணம் சொல்லும் பெயராக ஜெயலலிதா ஆக்கிவிட்டார். கும்பகோணம் மகாமகத்தில் உடன்பிறவாச் சகோதரியோடு புண்ணியத் தீர்த்தம் எனக் குடம்குடமாக நீர் முழுக்காடிய ஜெயலலிதாவால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கடியில் சிக்கி, மிதிபட்டு நசுங்கிச் செத்தார்கள். ஈவிரக்கம் அற்ற, அடங்காத ஜெயலலிதாவின் ஆணவப்போக்கு இன்றுவரையிலும் மாறவே இல்லை. அவர் ஒருக்காலும் திருந்தமாட்டார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சமும், காயமுற்றோருக்கு ஒரு இலட்சமும் அண்ணா திமுக கட்சியில் இருந்து வழங்கவேண்டும். முதலமைச்சர் கலந்துகொண்ட விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் சிலர் உயிரிழக்கவும், பலர் உடல் நலிவுறவும் காரணமான சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share