கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிப் பாதையில் இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஸ்கூட்டர்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். கிராமப்புறங்களில் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டின் ஜனவரி முதலே ஸ்கூட்டர் விற்பனை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே ஸ்கூட்டர் விற்பனை மோட்டார் சைக்கிள் விற்பனையை விட இரு மடங்கு உயர்ந்து 25 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது. அதன் பின்னர் நவம்பர் மாதம் வரையிலும் ஸ்கூட்டர் விற்பனை மந்தமாகவே இருக்கிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனைக்கு இடையேயான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இப்போது மோட்டார் சைக்கிள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விற்பனையை மட்டுமே ஸ்கூட்டர்கள் கொண்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் கவர்ச்சிகரமான புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாலும், கிராமப்புறங்களில் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் குறைந்து வருவதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களும், இருசக்கர வாகனச் சந்தையாளர்களும் கூறுகின்றனர். அதேபோல, நகர்ப்புறங்களிலும் ஸ்கூட்டர்கள் விடுத்து கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். 100 சிசி மற்றும் 110 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனை மந்தமாகி வருவதால் ஒட்டுமொத்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக *ஹீரோ மோட்டோ கார்ப்* நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் *டி.என்.என்.* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.