இலங்கை பெண் இந்தியராகிவிட முடியாது!

By Balaji

|

Published on 22 Jul 2018, 12:00 AM

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்கள் வைத்திருந்தாலும், இலங்கை பெண்ணை இந்திய குடிமகளாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யா என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், இலங்கையைச் சேர்ந்த ஜெயந்தி 1990ஆம் ஆண்டு அகதியாக இந்தியாவுக்கு வந்தார். இங்கு பிரேம்குமார் என்பவரை 1992ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியுள்ளனர். வேலைக்காக இத்தாலி சென்ற ஜெயந்தி, அடிக்கடி இந்தியாவுக்கு வருவார்.

ADVERTISEMENT

அதுபோன்று, தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த 1ஆம் தேதி இத்தாலியிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் அவரைச் சிறை பிடித்தனர். இதனால், தனது தாயை விடுவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 21) நீதிபதி டி.ராஜா முன்பு நடந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, “ இலங்கை குடிமகளாகிய ஜெயந்தி அந்த நாட்டின் பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பாஸ்போர்ட் 1994ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. அவரிடம் இந்தியாவுக்கான பாஸ்போர்ட் இருக்கிறது. மோசடி செய்து பாஸ்போர்ட்டை வாங்கியுள்ளார். எனவேதான் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயந்திக்கு ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற குடியுரிமைக்கான ஆவணங்கள் உள்ளன. இதனால், அவரை விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் இந்தியராகிவிட முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel