மனோகர் பாரிக்கர் பதவி விலகப் பேரணி!

Published On:

| By Balaji

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் 48 மணி நேரத்தில் பதவி விலகக் கோரி, அவரது வீட்டை நோக்கி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று (நவம்பர் 20) மாலை பேரணி நடத்தினர்.

கோவா மாநில முதல்வரான மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் மனோகர் பாரிக்கர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இயலாத சூழலில் இருக்கிறார். இருப்பினும் அம்மாநிலத்துக்கு புதிய முதல்வர் யாரும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. இதனால் அம்மாநிலத்தின் நிர்வாகப் பணிகள் சீரற்று உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மனோகர் பாரிக்கரின் வீட்டை நோக்கி, நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் பேரணி’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் நேற்று மாலை பேரணி சென்றனர். இந்தப் பேரணியில், தன்னார்வ தொண்டு அமைப்பினர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின் போது, மாநிலத்துக்கு முழு நேர முதல்வர் தேவை, எனவே மனோகர் பாரிக்கர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் பேரணியில் ஈடுபட்டவர்களை, மனோகர் பாரிக்கர் வீட்டுக்கு அருகே செல்ல விடாமல் 100அடி தூரத்திலே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து பனாஜி, துணை ஆட்சியர் சசாங்க் திரிபாதி கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், பேரணியில் கலந்து கொண்டோரை முதல்வர் சந்திக்க மறுத்து விட்டார்’ எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதல்வரின் உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள பேரணியில் ஈடுபட்டவர்கள் விரும்புகின்றனர் என்று பேரணியில் கலந்து கொண்டு பேசிய சமூக ஆர்வலர் ஏரிஸ் ரோட்ரிக்ஸ், ”மனோகர் பாரிக்கர் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லையெனில், மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும்’ என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய, சிவசேனா கட்சியின் கோவா மாநில தலைவர் ஜிதேஷ் காமத், “மனோகர் பாரிக்கர் விரைவில் குணமடைய கோவா மக்கள் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அரசு நிர்வாகம் தொடர்ந்து முடங்குவதற்கு அவர் காரணமாக இருப்பதை மக்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share