யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 விடுதிகள் மூடப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) மேலும் 10 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சுமார் 6,000 ஏக்கர் வனப்பகுதி யானைகள் வழித்தடமாக இருந்து வருகிறது. விதிமுறைகளை மீறி, இந்தப் பகுதிகளில் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இதில், அந்த கட்டடங்களை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது, யானைகள் வழித்தடத்தில் 39 விடுதிகள் கட்டப்பட்டிருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.
வழக்கு விசாரணையின்போது, தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக 12 விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மற்றவர்கள் விசாரணையில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து 27 விடுதிகளைப் பூட்டி சீல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மீதமுள்ள 12 விடுதி உரிமையாளர்கள் அளிக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியது.
கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதியன்று 27 விடுதிகளுக்கு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசினகுடியில் மூன்று நாட்கள் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீதமுள்ள 12 விடுதி உரிமையாளர்கள் அளித்த ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டன. இதன் முடிவில், மேலும் 10 விடுதிகள் முறையான அனுமதி பெறாதது தெரியவந்தது.
இந்தக் காரணத்தின் அடிப்படையில் இன்று, அந்த விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.�,