தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

Published On:

| By Balaji

ராஜஸ்தானில் கணவனை இழந்து விதவையான தாய்க்கு, அவரது மகள் வரன் தேடி மறுமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கீதா குப்தா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் முகேஷ் குப்தா, கடந்த 2016ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கீதா குப்தா மிகவும் மனமுடைந்தார். இந்நிலையில் மகள் சன்கித்தாவும் பணிக்காக குருகிராம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இது கீதாவிற்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியது. சன்கித்தா வாரந்தோறும் தனது தாயைச் சென்று பார்த்து வந்தார். இருப்பினும் அவர் தனிமையில் வாடிவருவதை உணர்ந்த சன்கித்தா, தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்து, மேட்ரிமோனியில் வரன் தேட தொடங்கினார். அவருக்குப் பல வரன்கள் வந்தன. இது குறித்து தனது தாயிடம் கூறியது போது அவர் சம்மதம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கீதாவின் உறவினர்கள் இந்த மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பல தடைகளை மீறி சன்கித்தா, கீதாவிற்கு நல்ல வரனைத் தேர்ந்தெடுத்தார். பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை ஆய்வாளர் கே.ஜி.குப்தாவிற்கும் தனது தாய்க்கும் திருமணம் நடத்தி வைத்தார். கடந்த மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு தனது தாய் கீதா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சன்கித்தா கூறினார். பல எதிர்ப்புகளையும் மீறி தனது விதவை தாய்க்கு மறுமணம் செய்து வைத்த சன்கித்தாவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share