சென்னை புகைப்பட கலைவிழா – வரவனையான்

Published On:

| By Balaji

பெரிய கலாச்சாரங்களின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீரமைவு உள்ளூர் கலாச்சாரங்களை அழித்துவிடவில்லை. மாறாக, அன்னிய கலாச்சாரத்தை உள்வாங்கும் குழு அதை, தன்னுடன் இணைத்து முற்றிலும் புதியதொன்றாக வெளிப்படுத்துகிறது. அது ஏற்கனவே இருக்கும் கலாச்சாரத்துடன் இணைந்து கொள்கிறது இதை நாம் ஒருங்கிணைவு என்போம். இந்தக் கண்காட்சியின் நோக்கம், புறவுலகுக்கு இன்னும் அடையாளப்படுத்தப்படாத, மீச்சிறு கலாச்சாரம் கொண்ட மக்களும், அவர்களின் குறியீடுகள்கொண்ட புகைப்படங்களில் வெளிப்படும் கலாச்சாரம் சுயச்சீண்டலுடையதாக உள்ளது” என்ற அறிவிப்பு, மயிலாப்பூர் நாகேஸ்ராவ் பார்க் வாசலில் நுழைந்தவுடன் இருந்தது. இதை படித்தவுடன் இதற்குமேல உள்ள போய்த்தான் ஆகணுமா? என கொஞ்சம் மெர்சல் ஆனது உண்மைதான்.

சென்னை கெட்டா இன்ஸ்டிடியூட் (மாக்ஸ்முல்லர் பவன்), டிராவலிங் லென்ஸ் உள்ளிட்ட சில அமைப்புகளால் பிப்ரவரி 26 முதல் மார்ச் 13 வரை ‘சென்னை புகைப்பட கலைவிழா’ கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக “இயற்கையாகவே சர்ரியலிசம்” என்ற புகைப்படக் கண்காட்சி நடந்தது. அந்த போர்டை படித்துப் பயப்படாமல் உள்ளே சென்றபின், நான் பெற்ற அனுபவம் அலாதி. நான் பிறந்த காலத்துக்கும் சற்றே முந்திய வட இந்திய வாழ்க்கையின் புனைவு மனம் கமழும் புகைப்படங்களையும், பல்வேறு கலாச்சாரங்களின் புகைப்படங்களை காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த அற்புத மாலையை இந்த படங்களை கண்ணுறாமல் பலரும் உடற்பயிற்சியில் (சிரிக்காதீர்கள் இது செல்ஃபி யுகம்) ஈடுபட்டது எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் இருந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படக்காரர்களின் படங்களில் என்னைக் கவர்ந்த ஒருசில படங்களை இங்கு விவரிக்கிறேன். ஒரு ஓவியத்தையோ, புகைப்படத்தையோ வார்த்தைகளால் விவரிப்பது வெங்கொடுமைதான். மன்னியுங்கள்.

ADVERTISEMENT

கரோலின் (karolin klueppel)- 30 வயதாகும் ஜெர்மனி புகைப்படக் கலைஞர் க்ரோலின், மேகாலயாவில் எடுத்த படங்களில் அத்துணை நேர்த்தியும், கலையும் மிளிர்ந்தன, கண்ணில் அடிபட்ட சிறுமியின் பார்வையும், அடுப்படியிலிருந்து வரும் புகைகளுக்கிடையே நீளும் ஒரு கரம், பாடம் செய்யப்பட்ட பாம்பின் தலைகளைக் கோர்த்து மாலை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் பெண், குட்டையில் துழாவும் குழந்தையென அச்சு அசல் புகைப்படங்களில் சர்ரியலிசத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

ப்யோதர் ஸெபர்ஸ்கி – போலந்தைச் சேர்ந்த இந்த இளம் போட்டோகிராபரின் படங்களின் சிறப்பு என்னவென்றால், கறுப்பு-வெள்ளைப் படங்களை எடுக்கும்போதே படங்களில் ஒரு உறைவும், அதுபோல சின்னதொரு இயக்கமும் இருக்கும். கறுப்பு வெள்ளைப் படங்களின் நேர்த்தியும், கலைத்தன்மையும் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

டேனிஸ் டெய்ல்யூ – 58 வயதாகும் ப்ரெஞ்சு புகைப்படக்காரரான டேனிஸ், எகிப்தின்மீதும் அதன் கலாச்சாரங்களின்மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அருகிலிருக்கும் கானா நாட்டுக்கு எதேச்சையாகப் போனவருக்கு பெரும் அதிர்ச்சி! அங்கு தென்படும் காட்சியமைப்பும் நிறங்களும் ஆயில் பெயிண்டிங்கால் வரையப்பட்டதுபோல் இருந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் கானா நாட்டுக்குச் சென்றுவருவதாக குறிப்பிடும் டேனிஸ், இங்கு காட்சிப்படுத்தியுள்ள படங்களில் கானாவின் மீனவ கிராமங்களில் ஒரு மாலைப்பொழுதில் நாம் இருக்கும் உணர்வைப் பெறமுடிகிறது. புகைப்படங்களில் இயல்பாய் எதிர்பார்க்கக்கூடிய புன்னகை என்ற ஒன்றை, தன் படைப்புகளில் முற்றாக மறுதலிக்கிறார் டேனிஸ்.

அடோர் லாரா – ஸ்பெயின் புகைப்படக் கலைஞரான அடோர் உலகம் முழுவதும் நாகரிகத்தால் வலிந்து நகரமயத்துக்குள் உள்ளிழுக்கப்பட்ட பழங்குடியினர், விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் நிலையையும் தொடர்ந்து காட்சிப்படுத்தி வருகிறார். இந்தியாவில், இவர் பயணம்செய்து சமூக சிறுபான்மையினரையும், தலித்துகளை மட்டுமே படம் எடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். இவரின் கறுப்பு வெள்ளைப் படங்களில் ஆயிரம் கதைகளும், உணர்வுகளும். அங்கு காட்சிப்படுத்தாத அடோரின் படம் ஒன்றை இணையத்தில் காண நேர்ந்தது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் உக்கிரமான கோபத்துடன் ஒரு பெண் பாலியல் தொழிலாளி புகைப்படக்கருவியைப் பார்த்து, தன் சேலையை உயர்த்திக்காட்டும் காட்சி. அதிலும் அவரின் முக உணர்ச்சியில் அழுத்தமும், கோபமும் வெடித்துப் பிறீடுவதைக் காணமுடிகிறது. அதைவிட பேரதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. காரணம், மும்பையின் ரெட் லைட் ஏரியாவில் அந்தப் பெண் போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரின் பின்னால் உள்ள இலவச ஆணுறை வழங்கும் பெட்டியும், தற்காப்பு அறிவிப்புகளும் தமிழில் இருந்ததுதான்.

ADVERTISEMENT

சுரேஷ் பஞ்சாபி – வின்டேஜ் புகைப்படங்களால் நிறைந்த சுரேஷ் பஞ்சாபியின் படங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதிகம் பரிச்சயமான வட இந்தியக் கலாச்சாரம் என்பதாலும், ஒவ்வொரு படங்களின் பின்னால் ஏதோ, ஒரு இந்தி சினிமாவின் தாக்கம் நிறைந்திருப்பதாகவும் இருக்கலாம். அந்த வெள்ளந்தி முகங்களில் எளிமையின்றி வேறெதுவும் என் கண்களுக்குத் தெரியவேயில்லை. கழுத்தில் கர்ச்சீப்பும், கண்களில் பெரிய கண்ணாடியும், முண்டா பனியனுமாய் ஒரு “தக்” (Thug) லுக் கொடுக்கும் இளைஞன், சைடு போஸில் வானம் பார்க்கும் இளம்பெண். ஒரே பூக்கள் போட்ட சட்டை போட்டிருக்கும் சகோதரர்கள் கையில் ரேடியோவை உயர்த்திப் பிடித்துக் கொடுத்திருக்கும் போஸ். திராட்சை கடிக்கும் கண்களில் கனவுகள் மிதக்கும் பெண், மது பாட்டிலும்,கிளாசுமாய் காதலியை நினைத்து விட்டத்தை வெறிக்கும் தேவதாஸ், செல்ல ஆட்டுக்குட்டியுடன் மத்திய வயதுப்பெண் என அந்த காலத்திற்கே அழைத்து சென்றது.

50 நிமிடங்களில் உலகின் பல்வேறு கலாச்சாரங்களையும், அதன் வெவ்வெறு காலத்துக்கும் பயணிக்க முடிந்தது. முத்தாய்ப்பாய்ச் சொல்ல ஏதுமில்லை. இன்னும், இரண்டு நாள் படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற ஏக்கத்தைத் தவிர!

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share