கேரள மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் வகையில் சென்னையில் கண்காட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் சுற்றுலா வருவாயில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது. 2018ஆம் ஆண்டில் மட்டும் 13.78 லட்சம் பேர் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12.72 லட்சமாக இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு சுற்றுலா செல்லவே பயணிகள் தயங்குகின்றனர். இதுபோன்ற சூழலில் கேரள சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பாகக் கண்காட்சிக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தின் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில் துறைகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்த 200 பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்ற கண்காட்சிக் கூட்டம் மதுரையில் பிப்ரவரி 28ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுற்றுலாத் துறையின் சந்தைப்படுத்துதல் பிரிவு துணை இயக்குநரான அனில் வி.எஸ்., *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சுற்றுலாத் தலங்கள் பாதிப்படையவில்லை என்பதை வலியுறுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்காகவும்தான் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
புவனேஷ்வர், விஜயவாடா, அகமதாபாத், வதோதரா, சூரத், லக்னோ, இந்தூர், நாக்பூர், புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சிக் கூட்டங்கள் கேரள சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்டுள்ளன.
