ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகியோர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் சோதனை மேற்கொண்டனர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள். உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம், குனியமுத்தூரில் அபுபக்கர் மற்றும் அக்பர், இதியதுல்லாஹ் மற்றும் ஷகிம்ஷா உள்ளிட்ட 7 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையின்போது 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென்டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க், 3 லேப்டாப்கள், 300 துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் 1 இண்டர்நெட் டாங்கிள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின்போது அசாருதீன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட விசாரணையின் தொடர்ச்சியாக, கடந்த 13ஆம் தேதியன்று கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள். அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில், ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூன்று பேரையும் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தினர் போலீசார். மூவரையும் வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து மூவரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
,”