ஆளுநர் ஆய்வு : குழப்பும் விஜயகாந்த்

Published On:

| By Balaji

ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சி செய்ய முயல்கிறது என்ற குற்றம் சாட்டியுள்ள விஜயகாந்த், மறுபுறம் ஆளுநரின் ஆய்வைப் பாராட்டியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் அரசின் நிர்வாகத்தில் தலையீட்டு, ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஆட்சிப் பகுதிகளான இந்த மாநிலங்களில் ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால் தனி மாநிலமான தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்க, பதவியேற்று ஒரு மாதமே ஆன ஆளுநர் பன்வாரிலால், கோவையில் அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிராக பாஜக ஆளுநர் வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதாக ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று ( நவம்பர் 15) கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆளுநரின் ஆய்வுக் கூட்டத்தை ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் ஆட்சியாளர்களின் அவலத்தை பறைசாற்றும் விதமாகவே இது உள்ளது. இதற்கு முன்பு இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. இது ஆட்சியின் நிலையில்லா தன்மையையே காட்டுகிறது என்று ஆளுநரைப் பாராட்டிய விஜயகாந்த்,கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியை செலுத்த முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர் , டெல்லி, புதுச்சேரியின் நிலைமை தமிழத்திற்கும் வந்துவிட்டது என்று மக்கள் எண்ணக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த கருத்து ஒருபுறம் ஆளுநரை பாராட்டும் விதமாக இருந்தாலும், மறுபுறம் பாஜகவை குற்றம் சாட்டுவதுபோல அமைத்துள்ளதால், விஜயகாந்தின் கருத்து குழப்பம் விளைவிப்பது போலவே அமைத்துள்ளது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share