கரூரில் மனு அளித்த பெண்மணிக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கடந்த 11 ஆம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிசந்திரனுடன் வந்து மனு அளித்தார்.
அதில், ”தனது மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி. கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இருக்க வீடு இல்லாததால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்கு கூட யாரும் வீடு தர மறுக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்படி அந்தப் பெண்ணுக்கு கரூர் காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கிக் கொடுக்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
அதன்படி, 1 மணி நேரத்திற்குள் அந்த பெண்ணுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணையினை மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். மேலும், குடியிருப்பிற்கு பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ.1.88 லட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாக தெரிவித்தார். அதனடிப்படையில் 1 மணி நேரத்தில் அந்தப்பெண்ணுக்கு ரூ.8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரின் செயலை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அன்பார்ந்த (மருத்துவர்) பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து அப்பெண்ணிற்கும் அவரது உடல் ஊனமுற்ற மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
தங்களின் பணிமென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,”