இந்தியச் சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 5ஆம் தேதி முதல் இந்திய-சீன எல்லையில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலிருந்து எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று இதுவரை சரியான தகவல் வெளியாகாத நிலையில் 43 பேர் பலியாகியுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்ததாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் தொடரும் பதற்றம் தொடர்பாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கி பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே இரு தரப்பு மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 17 வீரர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமருடனான ஆலோசனையைத் தொடர்ந்து மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூன் 17) லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் இரண்டாவது முறையாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராணுவம், விமானப் படை, கப்பல் படை ஆகிய முப்படைகளுக்கும் உச்சக்கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, எந்த மோசமான சூழ்நிலைக்கும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் கமாண்டருக்கு வழக்கமான முறைகளைத் தவிர்த்துத் தகுந்த சரியான பதிலடி கொடுப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**