முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐபேக் தயாரித்துக் கொடுத்த பிரச்சாரத் திட்டத்தின்படி தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் ஆ,ராசாவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சென்னையை ஒட்டிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆ.ராசாவும் ஐபேக் கொடுத்த நிகழ்ச்சி நிரல்களின்படியே சந்திப்புகள், உரையாடல்கள், பொதுக்கூட்டங்கள் என்று தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.ஏற்கனவே 2ஜி விவகாரம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சென்னையில் சில செய்தியாளர் சந்திப்புகளை நடத்திய ஆ.ராசா, இது தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா என்று முதல்வருக்கு சவால் விட்டார். அது மட்டுமல்ல…முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட வாசகங்களை எல்லாம் மேற்கோள் காட்டி இதற்கு என்ன பதில் என்று கேட்டு முதல்வருக்கு கடிதமும் எழுதினார் ஆ.ராசா. இதுவரை அதற்கு அதிமுகவில் இருந்து பதில் இல்லை.
இந்த நிலையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிகளில் ஆ.ராசாவின் பிரச்சார ஸ்டைல் கட்சித் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று வருகின்றன. இதன் நீட்சியாக சில நாட்களாகவே, “இதுவரை டெல்லி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஆ.ராசா இனிமேல் தமிழ்நாட்டு மாநில அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இதற்கு அச்சாரமிடும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்”என்று பெரம்பலூரில் இருந்து குரல்கள் எழ ஆரம்பித்தன.
ஆ.ராசாவின் பிரச்சார உத்திகள் அவரது பேச்சாற்றல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை அவர் நகைச்சுவையாகவும், அசைக்க முடியாத ஆதாரத்தோடும் விமர்சிக்கும் வீச்சு போன்றவை திமுகவினரிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அவர் வடசென்னையில் கலந்துகொண்ட கூட்டங்களில் பேசிய பேச்சு சென்னையில் மட்டுமல்ல…வலை தளங்கள் மூலம் லட்சக்கணக்கான அளவில் ஷேர் செய்யப்பட்டு திமுகவின் மாநிலம் தழுவிய பிரச்சாரத்துக்கே ஒரு முன் மாதிரியாக அமைந்தது. மேலும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆ.ராசா தன் இயல்புக்கு மீறி இறங்கியடித்த ‘முன்னூறு நாள் திட்டம்’ போன்ற தாக்குதல்கள் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தின.
இதைத் தாண்டி குறிப்பாக, “ஜெயலலிதாவுக்கு இரு முகம் உண்டு. ஒன்று ஊழல் முகம். இன்னொன்று மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத முகம். இப்போது எடப்பாடி, ‘நான் அம்மாவின் ஆட்சியை அமைப்பேன்’என்கிறார். அவர் ஜெயலலிதா விட்டுக் கொடுக்க மறுத்த மாநில உரிமைகளை முழுமையாக மோடியிடம் கொண்டு அடகு வைத்துவிட்டார். அதனால் அவர் ஜெ.வின் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத ஆட்சியை கொடுக்கப் போவதில்லை.
அப்படியென்றால் அவர் ஜெ.வின் ஊழல் ஆட்சியைதான் கொடுக்கப் போகிறேன் என்று வெளிப்படையாக சொல்லுகிறார். மக்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். எங்கள் தொண்டர்களைத் தாண்டி அமர்ந்திருக்கிற பொதுஜனங்களே இதுபற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்’என்று ராசா பேசிய பேச்சு கட்சி சாராத பொதுமக்களிடமும் கூட, “இது மாதிரி பேசுற திமுககாரன் இன்னிக்கு காணுமேய்யா.. ஜெயலலிதாவை பாராட்டுறாரு. கரெக்டா விமர்சிக்கிறாரு. எடப்பாடிக்கு சரியா கிடுக்குபிடி போடுறாரு’என்று அந்தக் கூட்டங்களிலேயே கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், ஆ.ராசா மாநில அரசியலுக்குத் திரும்புகிறார் என்ற எதிர்பார்ப்பும் எண்ணமும் திமுக தொண்டர்களிடையே அதிகமானது. குறிப்பாக வட சென்னையில் அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த சென்னை திமுக நிர்வாகிகளிலேயே சிலர், “ராசாண்ணே எக்மோரில் நிக்கப் போறாரு. தலைவரே ராசாகிட்ட, ‘நீங்க டெல்லியில அரசியல் பண்ணினது போதும். உங்களை மாதிரியான ஒருவர் எனக்கு இங்க வேண்டும். நீங்க சட்டமன்றத் தேர்தல்ல போட்டியிட்டு அமைச்சராகணும்’னு சொல்லிவிட்டார்”என்றும் பேச…. சென்னை திமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான டாக் ஓடுகிறது.
இதுபற்றி விசாரித்தபோது… ஐபேக் நிறுவனம் எல்லாருக்கும் கொடுப்பதுபோல்தான் ஆ.ராசாவுக்கும் பகுதிகளையும் பிரசாரங்களையும் பிரித்துக் கொடுத்தது. ஆனால் ராசாவின் அறிவாளித்தனமான எதார்த்தமான பிரச்சாரம் இளைஞர்களிடையே பெரிய அளவுக்கு எடுபடுகிறது என்றும், கட்சி சாராத பொதுமக்களிடையே ராசாவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்றும் ஐபேக் தனது ரிப்போர்ட்டை ஸ்டாலினுக்குக் கொடுத்துள்ளது. அதில் மேலும் ஒரு கருத்தையும் அடிக்கோடிட்டு ஸ்டாலினிடம் சுட்டிக் காட்டியுள்ளது ஐபேக்.
அதாவது, “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாங்கள் திமுகவோடு பணியாற்றியிருந்தால் ஆ.ராசாவை நாங்கள் மீண்டும் டெல்லிக்கு அனுப்ப பரிந்துரைத்திருக்க மாட்டோம். திமுகவுக்கான மிகச் சரியான இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் ராசாவை மாநில அரசியலுக்கு பயன்படுத்தினால் திமுகவுக்கு பெரிய வீச்சு கிடைக்கும் என்று அப்போதே நாங்கள் பரிந்துரைத்திருப்போம். இப்போது அவர் எம்பியாகிவிட்டாலும், உங்களுடன் மாநில அரசியலில் அவர் இருப்பது சிறப்பாக இருக்கும்”என்று பிரசாந்த் கிஷோரே சில நாட்களுக்கு முன் ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார். இதுதான் மெல்ல மெல்ல கசிந்து சென்னை திமுக நிர்வாகிகளிடையே, ‘ராசா எக்மோரில் நிற்கப் போகிறார். தளபதிக்கு பக்கத்தில் இனி இருக்கப் போகிறார்’ என்ற விவாதங்களை பரப்பியது.
சரி…கட்சிக்குள் டாப் டு பாட்டம் வரை நடக்கும் இந்த உரையாடல் பற்றி ஆ.ராசா என்ன நினைக்கிறார்? அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஆ.ராசாவுக்கு இப்போது வரை அப்படிப்பட்ட எந்த எண்ணமும் இல்லை. அவரது சொந்த அண்ணன் கலியபெருமாள் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விரும்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது தம்பியான ஆ,ராசாவிடம் உதவி கேட்டிருக்கிறார். அப்போது ராசா, ‘விருப்ப மனு கேட்டு பணமே கட்டக் கூடாது’என்று அண்ணனுக்கு அன்புக் கட்டளையிட்டுவிட்டார்”என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,