தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
சென்னையில் இருந்து செல்லும் எல்லா ரயில்களும் நிரம்பி விட்டதோடு சிறப்பு ரயில்களிலும் இடங்கள் இல்லை. ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகமாக உள்ளதால் அரசுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 90,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 90,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் சென்னையில் இருந்து மட்டும் 60,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென்மாவட்டப் பேருந்துகளில் இடமில்லை. 9 மற்றும் 11ஆம் தேதி பயணிக்க சில இடங்கள் உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 64,000 பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு இதுவரையில் 90,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பேருந்துகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பேருந்துகளை முன்பதிவு செய்ய இணைத்துத் வருகிறோம். முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பேருந்துகளை இயக்க உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
அரசு பேருந்துகளை போலவே சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் 1,250 ஆம்னி பஸ்களிலும் 10ஆம் தேதிக்கான இடங்கள் நிரம்பி விட்டன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி கோரி பாஜக சார்பில் மனு!
துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!![]()
