உள்ளாட்சி வார்டு மறுவரையறை தொடர்பாக அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடந்துமுடிந்தது. ஆனால், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மூன்று மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பணிகளையும் முடித்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கெடு விதித்திருந்தது. இந்த அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வார்டு மறுவரையறை பணிகளுக்கு அவகாசம் கேட்டு மாநில தொகுதி மறுவரையறை ஆணையம் நேற்று (மார்ச் 6) மனுதாக்கல் செய்துள்ளது. அதில், “கடந்த 2019 டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி 3 மாத காலக்கெடு விரைவில் நிறைவடையவுள்ளது. இருந்தாலும் நிர்வாக காரணங்களால் 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரை பணிகள் நிறைவு செய்ய முடியவில்லை, எனவே கூடுதலாக 8 வார காலம் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி வரையறைக்கு இன்னும் 2 மாதங்கள் எடுத்துக்கொண்டால் அதன் பிறகான நடைமுறைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஆகும். ஆகவே, தற்போதைக்கு 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
**எழில்**
