>சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் இருந்துவரும் அதே சூழலில், 5 வேத பாடசாலைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது விஎச்பி எனும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு.
விஎச்பி சார்பில் தற்போது நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் ஆறு வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இதில், சுமார் 1400 மாணவர்கள் வேதம் மற்றும் வேதாந்தம் பயின்று வருகின்றனர். இத்துடன் அரசு மற்றும் மற்ற அமைப்புகள் நடத்துபவையும் சேர்த்து மொத்தம் 33 வேத பாடசாலைகள் உள்ளன. இவை உ.பி-யில் அதிகமாக அலகாபாத், ஹரித்துவார், அயோத்தி, மத்துரா, ரிஷிகேஷ் மற்றும் லக்னோவில் உள்ளன. இந்நிலையில் புதுடெல்லி, பஞ்சாபின் அமிர்தசரஸ், ராஜஸ்தானின் பஸ்வாரா, உ.பி-யின் மத்துரா மற்றும் ஹரியானாவின் குர்காவ்ன் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 120 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு வேதம், வேதாந்தம், ஜோதிடம், வியாகரன், சந்தத், நிருக்த், காவியம் மற்றும் ஷிக்ஷா ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. ஆச்சார்யா, வேதாச்சார்யா மற்றும் வேதபண்டிதர் உட்பட பல பட்டங்கள் அளிக்கப்பட உள்ளன. ‘வேத பாடசாலைகள் திறப்பதன்மூலம் தங்களது இந்துத்துவ கொள்கைகளையும், வர்ணாசிரமப் பிரிவினையையும் ஆழப்படுத்த முயற்சிக்கின்றனர்’ என விமர்சிக்கின்றனர் முற்போக்காளர்கள். ஆனால் விஎச்பி-யினரோ, ‘தமிழகத்தில் தங்கள் கொள்கைகளை வேர் பரப்ப வேண்டும்’ என்று திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.