வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அல்ல, வேலைவாய்ப்பு செய்தியை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி, அரசு துறைகளில் ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக இன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. 2014ல் ஆட்சிக்கு வரும் போது 2 கோடி வேலைவாய்ப்புகள் ஆண்டு ஒன்றுக்கு உருவாக்கப்படும் என்று கூறியிருந்த பிரதமர் மோடி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உணவு இடைவேளையின் போது பிரதமரை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முதல் நாள் 10 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணையிலிருந்த ராகுல் காந்தி, இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். காலை 4 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், உணவருந்தச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், ”இது பொய் வாக்குறுதி கொடுத்த அரசாங்கம் அல்ல, மகா பொய் வாக்குறுதி கொடுத்த அரசாங்கம். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றார்கள். இன்று ஓன்றரை ஆண்டில் 10 லட்சம் வேலைவாய்ப்பு என்கிறார்கள். பிரதமர் மோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. வேலைவாய்ப்பு குறித்தான செய்தியை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்” என்று கிண்டல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறை விசாரணை, காங்கிரஸ் தலைவர்கள் கைது என பரபரப்பான சூழ்நிலையில், இந்த பதிவை இட்டுள்ளார்.
**-பிரியா**