நாடு தழுவிய ஊரடங்கா?

Published On:

| By Balaji

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட அறிவுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடு தழுவிய ஊரடங்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று(ஏப்ரல் 8) ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் முதல் அலையை விட வேகமாக உள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலையளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மேலும், நோய் தடுப்பு பணிகளில் சுணக்கம் காட்டாமல், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் ’கொரோனா ஊரடங்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்பதால், நாடு தழுவிய ஊரடங்கு தேவையில்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் சோர்வடைந்து விடக் கூடாது. சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளின் நோய்கள் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருக்க வேண்டும். இது அவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரையாவது கண்டுபிடித்து சோதனை நடத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும். 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை அடைய வேண்டும். ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே ஒருமுறை கொரோனா தொற்றை தோற்கடித்த நாம், மீண்டும் ஒருமுறை அதை தோற்கடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 35 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.

**வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share