அமெரிக்காவில் மூன்று முக்கிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து சிகாகோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஈட்டன் நிறுவனத்துடன் ரூ.200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவப்பட உள்ளது.
பின்னர் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் காலணி உற்பத்தி நிறுவனமான நைக், டிஜிட்டல் மருத்துவ சேவை வழங்கும் ஆப்டம் ஆகிய நிறுவனங்களுடன் தமிழகத்தில் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் லிங்கன் எலக்ட்ரிக், விஷே ப்ரிசிஷன் மற்றும் விஸ்டியன் நிறுவனங்களுடன் ரூ.850 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
இதில் ரூ. 100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை விஷய் பிரிஷிஷன் நிறுவனம் நிறுவ உள்ளது.
ரூ. 500 கோடி முதலீட்டில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
ரூ. 250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை விஸ்டியன் நிறுவனம் நிறுவ உள்ளது.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “வாய்ப்புகளின் நிலமான அமெரிக்காவில், ஒவ்வொரு புதிய விடியலும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டுகிறது.
லிங்கன் எலக்ட்ரிக், விஷே ப்ரிசிஷன் மற்றும் விஸ்டியன் நிறுவனங்களுடன் ரூ.850 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளோம்.
இடைவிடாத முயற்சி மற்றும் உறுதியின் மூலம், நாம் தொடர்ந்து நம் கனவுகளை நிஜமாக்குகிறோம்” என்று ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அசோக் நகர் பள்ளி விவகாரம் – 4 நாட்களில் ஆக்ஷன் – அன்பில் மகேஷ் பேட்டி!