சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி எடுத்தது. லட்சக்கணக்கான மக்களை கொரோனா தொற்று கொன்றது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சீனாவில் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பீதியை கிளப்பியுள்ளது. கோவிட்-19 போலவே, இந்த வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது குழந்தைகள், வயதானவர்கள் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
human Meta-Pneumo Virus (HMPV)’ என்ற இந்த புதிய வைரஸ் சுவாச மண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா சீனாவில் யூஹான் நகரில் இருந்து பரவியது. அதே போல, இந்த புதிய வைரஸ் சீனாவின் வடக்கு பகுதியில் இருந்து பரவ தொடங்கியதாக தெரிகிறது. கொரோனா போலவே இந்த நோய்க்கும் அதே நோய் அறிகுறிகள் காணப்படுகிறது. கொரோனா போலவே மற்றவர்களுக்கும் பரவுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மிகுந்த ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சீனாவின் வடக்குபகுதி இந்த நோயால் பெரும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரே வாரத்தில் 94 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரான ஹாங்காங்கையும் இந்த நோய் தாக்கியுள்ளது. ஆனால், சீனா இந்த வைரஸ் விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது. இந்தியாவில் பெங்களுருவில் 8 மாத குழந்தை ஒன்றுக்கும் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தை எங்கும் பெற்றோருடன் பயணிக்கவில்லை. இருந்தும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பெங்களுருவிலுள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அந்த குழந்தை மருத்துவர்களால் கண்காணிக்கப்படுகிறது. இது குறித்து சுககாதாரத்துறை அதிகாரி ஹர்ஷா குப்தா கூறுகையில், ‘குழந்தையி்ன உடலில் இது போன்ற வைரஸ் கண்டறியப்படுவது சாதாரணமானதுதான். கடந்த காலத்தில் பல நோயாளிகளுக்கு HMPV வைரஸ் கண்டறிந்துள்ளோம். இதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை, எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை என்கிறார். இதற்கிடையே, பெங்களுருவில் மற்றொரு குழந்தையையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று போலவே இந்த வைரஸின் பாதிப்பு இருப்பதால், மாஸ்க் மீண்டும் அணிவதும், அடிக்கடி கையை சுத்தப்படுத்துவதும் நல்லது என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இன்னும் மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
