படைத்துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்கள்
அப்ரோஸ் கான்
படைத்துறை தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்குவது, 41ஆவது படைத்துறைத் தொழிற்சாலையான கொர்வா ஆர்டினன்ஸ் ஃபேக்டரியை ரஷ்ய நிறுவனத்தின் கம்பெனியாக மாற்றுவது ஆகியவற்றைக் கண்டித்துப் படைத்துறை தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 27 அன்று நாடு தழுவிய ‘கறுப்பு தின கண்டன’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் 41 படைத்துறைத் தொழிற்சாலைகள் உள்ளன இதில் ராணுவம் சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உத்தரப் பிரதேசம் அமேதி மாவட்டத்திலுள்ள கொர்வா ஆர்டினன்ஸ் ஃபேக்டரி அதில் ஒன்று. அதை ரஷ்ய நாட்டு நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சி எனும் பெயரில் தனியார் கம்பெனியாக மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அப்படி மாற்றிவிட்டால் இது ‘படைத்துறை’ தொழிற்சாலையாக இருக்காது. மாறாக, 50.5 சதவிகிதம் இந்திய அரசின் பங்கும் 49.5% ரஷ்ய நிறுவனத்தின் பங்கும் உள்ள கம்பெனியாக உருமாறும். 8 இயக்குநர்கள் கொண்ட போர்ட் அதை நிர்வாகம் செய்யும். அதில் இந்திய அரசின் சார்பில் 4 இயக்குநர்களும், ரஷ்ய நாட்டின் சார்பில் 4 இயக்குநர்களும் இருப்பார்கள். இந்நிறுவனம் பிற்காலத்தில் ‘தனியார்’ வசம் ஆக்கப்படலாம். இதுபோன்ற எல்லாத் தொழிற்சாலைகளும் பாதிக்கப்படலாம். தொழிலாளர்கள் வேலை இழக்கும் பாதிப்புகளும் அதிக அளவில் உண்டு. இதைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்துப் படைத்துறை தொழிற்சங்கங்களும் போரட்டத்தைத் துவக்கியுள்ளதாகத் தொழிலாளர் தலைவர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி பிஎம்எஸ்ஸின் தொழிற்சங்கச் செயலாளர் ஸ்ரீநிவாசன் கூறுகையில், “இந்தியப் படைத்துறை தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்குவது அறவே கூடாது. மேலும் புதிய பென்ஷன் திட்டம், பழைய பென்ஷன் திட்டம் என்றெல்லாம் இருக்கக் கூடாது எல்லோருக்கும் ஒரே பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் முழுமையாக போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றார். பிஎம்எஸ், ஆர்எஸ்எஸ் சார்புள்ள தொழிற்சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், “கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு, பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக படைத்துறை தொழிற்சாலைகளுக்கு எதிரான பல்வேறு தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைத் தாரை வார்க்கின்ற நிலையைக் கொள்கை முடிவுகளாக எடுத்திருக்கிறது” என்றார். இவர் தன் பெயர் குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை.
படைத்துறை தொழிற்சாலைகளையும் அவற்றின் உற்பத்திப் பொருட்களையும் தனியாரிடம் முழுமையாக ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டிவருகிறது. நமது படைத்துறைத் தொழிற்சாலைகள் உருவாக்கிய நவீன துப்பாக்கிகளை ஒதுக்கிவிட்டு அமெரிக்காவிடமிருந்து துப்பாக்கி கொள்முதல் செய்ய முடிவுசெய்துள்ளது. ரஷ்ய நாட்டு நிறுவனமான கலாஷ்னிகோவ் நிறுவனத்துடன் கூட்டாக நவீன ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய நம் நாட்டு அரசும் ரஷ்ய நாட்டு அரசும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
“ரஷ்யத் தயாரிப்பைவிடத் தரமான துப்பாக்கிகள் திருச்சி பேக்டரியில் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் நடந்த வான் வழித் தாக்குதலில் எதிரிகளின் இலக்கைத் தகர்த்த குண்டுகள் இந்தியப் படைத் தொழிற்சாலைகளால் தயாரிக்கப்பட்டவை, கார்கில் போரின்போது பனிமலைகளில் மேல் ஏறுவதற்கேற்ற நெகிழ்ச்சித்தன்மை கொண்ட (Flexible) ஷூ இல்லாமல் ராணுவ வீரர்கள் சிரமப்பட்டனர் அப்போது தனியார் நிறுவனத்தை நாடியபோது அந்த ஷூ ஸ்டாக் இல்லை என்று நிறுவனம் கைவிரித்துவிட்டது. இது போன்ற வேலைகளை எல்லாம் தனியார் நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் அவ்வளவு தீவிரமாக வேலை செய்ய மாட்டார்கள். மேலும் அவசர காலகட்டத்தில் பேரம் பேசுவது போன்ற பல சிக்கல்கள் அதிகம் உள்ளன. நாங்கள் போரின்போதெல்லாம் இரவு பகல் பாராமல் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்” என்றார் அந்தத் தொழிலாளர்.
ராணுவம், ராணுவ வீரர்களுக்குத் தேவையான குண்டு, துப்பாக்கி என்று போர் சம்பந்தப்பட்ட 650 பொருட்களை இந்தியப் படைத் தொழிற்சாலைகள் தயாரித்துவருகின்றன. அவற்றில் 275 பொருட்களைத் தயார் செய்ய வேண்டாம் என்று திடீரென்று உத்தரவு வந்தது என்று என்று ஏஐடிஈஎஃப் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவிக்கிறார்.
“இந்த உத்தரவால் 25 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகின்றன. இதைக் கண்டித்து ஜனவரியில் மூன்று நாள் போராட்டத்தை நடத்தினோம். அந்தப் போராட்டத்திற்கே இன்னும் தீர்வு எட்டாத நிலையில். மீண்டும் அரசு ஒரு புதிய பிரச்சினையைத் தொழிலாளர்கள் மீது சுமத்தியுள்ளது. கொர்வா தொழிற்சாலையை முதலில் கம்பெனியாக மாற்றி பின்பு அதை முழுவதுமாக தனியார்மயமாக்கி விடுவார்கள். பிறகு, மீதமுள்ள 40 தொழிற்சாலைகளுக்கும் அதே கதிதான் ஏற்படும். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்காமல், இருக்கும் வேலைகளைப் பறித்துத் தனியாருக்கு கொடுக்கிறது அரசு. முன்பெல்லாம் வெளிநாடுகளின் தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொண்டு அதற்குண்டான ராயல்டியை அரசு வழங்கிவிடும். ஆனால் இன்று வெளிநாட்டு நிறுவனங்களே நேரடியாக உள்ளே வந்து உற்பத்தி செய்யும் நிலை அதிக அளவில் உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு குறையக்கூடும்” என்கிறார் ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஹரிதாஸ்.
அங்கீகரிக்கப்பட்ட மூன்று தொழிற்சங்கங்களும் சேர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். தங்கள் கோரிக்கையை வலுப்படுத்தவே இந்த கறுப்பு தினப் போராட்டம் அனுசரிக்கப்பட்டது என்றும், அரசுத் தரப்பிலிருந்து இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை என்றும் போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
*(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)*