இந்தியாவில் 76% பேரால் சத்தான உணவு வாங்க முடியாது: ஆய்வு!

Published On:

| By Balaji

கிராமப்புற இந்தியர்களில் 76% பேரால் சத்தான உணவை வாங்க முடியாது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நான்கு கிராமப்புற இந்தியர்களில் மூன்று பேர் சத்தான உணவை வாங்க முடியாது என்று சமீபத்தில் உணவு கொள்கை இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் முழு வருமானத்தையும் உணவுக்காக செலவிட்டாலும் கூட, மூன்று பேரில் கிட்டத்தட்ட இருவரிடம், அரசு ஊட்டச்சத்து அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட மலிவான உணவுக்கு செலுத்த பணம் இருக்காது என்று அது கூறுகிறது.

‘கிராமப்புற இந்தியாவில் சத்தான உணவுகளின் மலிவு’ என்ற தலைப்பில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கல்யாணி ரகுநாதன் உள்ளிட்டோரால் அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 2011 தேசிய மாதிரி கணக்கெடுப்பில் இருந்த ஊதியத் தரவுகள் மற்றும் சமீபத்திய உணவுப் பொருட்களின் விலை ஆகியவை இக்கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

உணவில் தன்னிறைவு பெற்ற பாதுகாப்பான நாடு இந்தியா என மத்திய அரசு கூறிக்கொண்டாலும் பல ஊட்டச்சத்து குறியீடுகளில் இந்தியா மோசமான நிலையில் இருக்கிறது என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடந்த 16ஆம் தேதி வெளியான உலகளாவிய பசிக் குறியீடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருப்பதைக் காட்டுகிறது. கலோரிகளை கணக்கிடும் குறியீடுகளில் இந்தியா ஓப்பிட்டளவில் சிறப்பாக இருந்தாலும், அவை கலோரிகளின் ஊட்டச்சத்து மதிப்பைக் கணக்கிடாது.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி வளரிளம் பெண்களுக்கு ஒரு நாளைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க 330 கிராம் தானியங்கள் மற்றும் 75 கிராம் பருப்பு வகைகள், 300 கிராம் பால், 100 கிராம் பழம், மற்றும் 300 கிராம் காய்கறிகளுடன், குறைந்தது 100 கிராம் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்கிறது.

இந்திய உணவுகளான அரிசி, கோதுமை, கம்பு, பால், தயிர், வெங்காயம், முள்ளங்கி, கீரை, வாழைப்பழங்கள் போன்ற மலிவான விலையுள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க ஒருவருக்கு ஒரு நாளின் உணவுக்கு 45 ரூபாய், வயது வந்தவருக்கு 51 ரூபாய் செலவாகும் என்று ஆய்வு கணக்கிட்டுள்ளது.

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share