மருத்துவ படிப்பில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி 11ஆவது முறையாக கொடி ஏற்றினார்.
அதன் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், “இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்தது.
அவர்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களை நினைவில் கொள்ளுங்கள். நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமைத்தனம் மற்றும் அதன் ஒவ்வொரு காலகட்டமும் போராட்டத்தின் காலகட்டமாக இருந்தது. இளைஞர்கள், முதியவர்கள், விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் அடிமைத்தனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “இந்தியா பொருளாதாரத்தின் மந்திரமாக மாறியுள்ளது.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது அதன் உற்பத்தியில் பெருமை கொள்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற அதன் தனித்துவமான பலத்தை அடையாளம் காண முயல்கிறது.
வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் திறன் மேம்பாட்டை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 பட்ஜெட் இளைஞர்களின் வளர்ச்சியை உறுதி செய்வதையும், திறன் இந்தியா திட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஏன் ஒவ்வொரு உபகரணத்திலும் ‘மேட் இன் இந்தியா’ சிப் இருக்கக்கூடாது?
இந்தக் கனவை நனவாக்கும் ஆற்றல் நம் நாட்டிற்கு உண்டு. 6G நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவ படிப்பில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். லட்சம், கோடிக்கணக்கில் அவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே 1 லட்சம் மருத்துவ இடங்களை அதிகரித்துள்ளோம். இது மேலும் அதிகரிக்கப்படும்” என தெரிவித்தார்.
வங்கதேசம் குறித்து பேசிய அவர், “வங்கதேசத்தில் இயல்பு நிலை ஏற்படும் என நம்புகிறோம். அங்கு உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியர்கள் கவலையடைந்துள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசிய மோடி, “நம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூர செயல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்” என்றார்.
இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, “நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். உத்வேகமாக செயல்பட்டால் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக நாம் உருவாக முடியும்” என்றும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் : புதிய திட்டங்களை அறிவித்த ஸ்டாலின்