நா.மணி
நாமக்கல் மாவட்டம், வேலூர், கந்தசாமி கவுண்டர் கல்லூரியின், பொருளாதாரத் துறை, இந்திய அரசின் சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR) நிதி உதவியோடு இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கை நடத்தியது.
“சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால சாதனைகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், 13-10-23 அன்று ஆற்றிய உரையின் தொகுப்பு.
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளில், நம் நாடு, அறிவியல் வளர்ச்சியில் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது.
விண்வெளி ஆய்வு, அணுசக்தி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு உற்பத்தி, உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி போன்ற துறைகளில், வியத்தகு வெற்றியை பெற்றுள்ளோம்.

இதற்குப் பின்னால், நமது விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, கூட்டு உழைப்பு இருக்கிறது. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. அதே நேரத்தில், நம் நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது, நமது விஞ்ஞானிகள் மட்டுமே ஈன்றெடுத்த செல்வங்கள் அல்ல, என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுதந்திர இந்தியாவில், ஆட்சி செய்து கொண்டிருக்கிற, ஆட்சி செய்த, அரசுகள், அரசியல்வாதிகள் மட்டுமே, இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இதற்கான விதையை ஊன்றியவர்கள், நமது சுதந்திர போராட்ட தியாகிகள், முன்னோடிகள்.
நாடு, வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, அறிவியல் தொழில்நுட்ப துறையிலும், நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று, அன்றே கனவு கண்டனர். நாட்டு மக்களின் வளர்ச்சி, அவர்களது விடுதலை வேட்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது.
நாட்டை, வெள்ளையரிடமிருந்து மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், மக்களை, வறுமையின் கோரப் பிடியிலிருந்தும், விடுவிக்க வேண்டும் என்று, அவர்கள் கனவு கண்டனர். அதற்காக உழைத்தனர். ஒடுக்கு முறைக்கு ஆட்பட்டனர். அடக்குமுறைக்கு உள்ளானார்கள். உயிர் தியாகம் செய்தனர்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வை!
நாட்டின், அனைத்து விடுதலை போராட்ட தலைவர்களும், விடுதலைக்காக போராடியதோடு, நாடு, அறிவியல் தொழில்நுட்ப துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் போராடினர்.
அறிவியல் தொழில்நுட்பத்தில், நாம் முன்னேற வேண்டும் என்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் சிந்தனை, வெறும் ஆர்வம் மட்டுமல்ல. அவர்களது பெரு விருப்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல,தெளிவான, தொலைநோக்கு சிந்தனையும், அவர்களுக்கு இருந்தது.

அறிவியல் மனப்பான்மையுமே. அறிவியலை விலைக்கு வாங்கவோ, கடன் வாங்கவோ முடியாது என்பதை தீர்மானகரமாக அவர்கள் நம்பினர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வழியாகவே, இந்திய நாட்டின், வேளாண்மையை, தொழில்துறையை, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை அவர்கள் நம்பினர். நாடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற வேண்டும் எனில், இயற்கையையும் சமுதாயத்தையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். என்று அவர்கள் கணித்திருந்தனர்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் இலக்குகள்!
விடுதலைப் போராட்ட தலைவர்கள், விடுதலை இயக்கத்தில், இரண்டு இலக்குகளை தீர்மானித்துக் கொண்டனர். ஒன்று, அனைத்து இந்திய குடிமக்களுக்குமான திட்டமிடுதல். இரண்டு, வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடலில் மாநிலங்களையும் பங்கேற்ற செய்வது.
1938 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காங்கிரஸ் கட்சியில் கீழ் ஒரு திட்ட குழுவை உருவாக்கினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியத் திட்டக்குழு என்பது உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் கனவுகளோடு மலர்ந்த, இந்தியத் திட்டக் குழுவின் முன்பு, இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, வறுமை இரண்டு, வருவாய் ஏற்றத்தாழ்வுகள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முகிழ்த்தெழுந்து, பொறுப்புக்கு வந்த தலைவர்கள், வறுமை, வருவாய் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும், சிறந்த கருவிகளாக தொழில்நுட்பத்தையும், தொழில் துறையையும், வேளாண்மையையும் மதிப்பீடு செய்தனர். தொழில் துறையை முன்னேற்றம் அடையச் செய்வதும், வேளாண்மை துறைக்கு புத்துயிர் ஊட்டுவதும், தலையாய கடமை என்று கருதினர்.
அவ்விரண்டு பணிகளுக்கும், அடித்தளமாக இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், செயல்பட முடியும், என்பது அவர்கள் மதிப்பீடு. வலுவான பொதுத்துறை வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், வேளாண்மை துறை வளர்ச்சி வேண்டும் எனில், அதற்கு அடிப்படையில் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டம் வளர்தெடுக்கப்பட வேண்டும். அறிவியல் கல்வி வளர்ச்சியும், கல்வியின் மூலம் குடிமக்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு பயிற்சியும் வழங்கப்பட வேண்டும், என்பது அவர்களது தொலைநோக்கு பார்வையாக இருந்தது.
அறிவியல் வளர்ச்சியின் பின்னனி
இத்தகைய தொலைநோக்குப் பார்வையின் விளைவாகத்தான், 1952 ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம் ( CSIR), 1954 ல், அணு சக்தி துறை, 1958ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை, 1971ல், இந்திய மின்னணுவியல் துறை, 1972ல், இந்திய விண்வெளித் துறை, 1980 ஆம் ஆண்டு , சுற்றுச்சூழல் துறை போன்ற துறைகள் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போது, இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையில், நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு, தொழில் மற்றும் வேளாண்மை துறைகள் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளவை இத்துறைகளே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஐந்தாண்டு திட்டங்களின் முன்னோடித் திட்டம்
இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்களின், இயங்கு விசையாக செயல்பட்டது, 1944 ஆம் ஆண்டின் பம்பாய் திட்டம். சுதந்திரத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட இத்திட்டம், நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தொலைநோக்கு பார்வையை இன்றும் நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது.
டாட்டா, பிர்லா உள்ளிட்ட தொழில் முதலாளிகள், இத்திட்ட தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தனர். பிரிட்டிஷார் பின்பற்றி வந்த, தலையிடாக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இத்திட்டம் கூறியது. பொது துறையையும் மற்றும் தனியார் துறை இரண்டும் உருவாக்கும் வளர்ச்சியே நமது நாடு சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படும். இத்தகைய கலப்பு பொருளாதார வளர்ச்சிப் பாதையே நம் நாட்டிற்கு ஏற்றது என அத்திட்டம் கூறியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த பம்பாய் திட்டம், முதலாளித்துவம் சோசியலிசம் இரண்டின் கலவை. நமது நாட்டின் வறுமையை போக்கவும், வருவாய் ஏற்றத்தாழ்வு குறைக்கவும், இந்தப் பாதையில் தான் நாடு பயணிக்க வேண்டும் என்றனர். கேந்திரமான துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களே முக்கிய பங்காற்ற வேண்டும், என்று அத்திட்டம் கூறியது.
தொழில்துறை வளர்ச்சி அடைய வேண்டும், அதில் பொது துறை முக்கிய பங்காற்ற வேண்டும். உட்கடமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். சமூக நலத்திட்டங்கள் அதிகரிக்க வேண்டும். கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றது திட்டம். அத்தோடு, நிலச் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். குத்தகை விவசாய முறைமை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் பம்பாய் திட்டம் கூறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இவை அனைத்தும் ஐந்தாண்டு திட்டங்களின் உள்ளீடுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கைகொடுத்தவர்களும் கை விரித்தவர்களும்
ஐந்தாண்டு திட்டங்களின் முக்கிய தொலைநோக்கு பார்வையில் ஒன்று, சுதந்திர இந்தியாவில் சுய சார்பை படிப்படியாக அடைய வேண்டும் என்பது. அதற்கு உள்கட்டமைப்பில் முன்னேற்றம் தேவை, தொழில், வேளாண்மை வளர்ச்சியில் துரித வளர்ச்சி அடைய வேண்டும் என்பவை இதன் அடிநாதமாக இருந்தது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கடுமையான சுரண்டலில் சிக்கியிருந்த ஒரு நாடு, பல பஞ்சங்களை கண்ட நாடு, பட்டினியில் கோடிக் கணக்கான மக்களை இழந்த நாடு, சுயசார்பை அடைய வேண்டுமானால் அயல்நாடுகளோடு தொழில் கூட்டு (collaboration) தொழில்நுட்ப மாற்றம் (Tranfer of Technology)ஆகியவை அவசியம் என்பதை திட்டக்குழுவினர் உணர்ந்தனர்.
இதனை செயலாக்கம் செய்ய முனைந்த போது, மேற்குலக நாடுகள் என அழைக்கப்படுகிற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நமக்கு அத்தகைய ஒத்துழைப்பை நல்க மறுத்துவிட்டது. நாம் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியிலேயே ஈடுபட வேண்டும். தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு இருக்க வேண்டும் என அவை விரும்பின. இரும்பு எஃகு தொழில், நீராவி இன்ஜின்கள், பாய்லர் தொழிற்சாலைகள், மருந்து உற்பத்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, போன்ற துறைகளில் நம்மோடு கூட்டு வைத்துக் கொள்ளவோ தொழில்நுட்ப மாற்றம் செய்து கொள்ளவோ மேற்குலக நாடுகள் மறுத்தன.
அன்றைய சோவியத் ஒன்றியம், அன்றைய கிழக்க ஐரோப்பிய நாடுகளே நம்மோடு மேற்படி தொழில்களில் கூட்டு சேர முன்வந்தன. நவீன அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு ஒத்துக் கொண்டன. இன்று இந்தியாவில் இவ்வளவு பெரிய தொழில் கட்டமைப்பு அடித்தளம் உருவாவதற்கு காரணமாக இருந்தது, குறிப்பாக, மின்சாரத்துறை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, இரும்பு எஃகு உற்பத்தி, அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, விண்வெளி துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வழங்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பே காரணம்.
சுதந்திர இந்தியாவின் அதிமுக்கிய வேளாண்மை சாதனைகள்
வேளாண்மை துறையில் நிகழ்தப்பட்ட பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சி, மஞ்சள் புரட்சி, மற்றும் தங்க புரட்சி ஆகியவற்றுக்கு பொதுத்துறை நிறுவனங்களே பெரும் பங்காற்றியது. அப்போதைய தொழில் கூட்டு, தொழில் நுட்பம் மாற்றம் ஆகியவையே அடிப்படை காரணம். பசுமைப் புரட்சியின் காரணமாக, வேளாண்மை உற்பத்தி திறன் பெருக்கம், குறிப்பாக, கோதுமை மற்றும் நெல் உற்பத்தி திறன் பெருக்கம் குறிப்பிடத்தக்கது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், உணவுப் பாதுகாப்பை அடையவும், காரணமாக இருந்தது. வெண்மை புரட்சி, பால் உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவை வளர்த்தது. கிராமப்புற மக்கள் வருமானம் அதிகரிக்கவும், குடிமக்களில் சத்து விகிதம் உயரவும் இது காரணமாக அமைந்தது.

மஞ்சள் புரட்சி எனப்படும் எண்ணெய் வித்துக்கள் புரட்சியின் வழியாக, இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பெருகியது. குறிப்பாக, சோயா பீன்ஸ் மற்றும் கடுகு உற்பத்தி பெருகியது. எண்ணெய் வித்துக்களுக்காக வெளிநாட்டை சார்ந்து இருப்பது குறைந்தது. தங்கப் புரட்சியின் காரணமாக தோட்டக்கலை துறை பொருட்கள் உற்பத்தி அதிகரித்தது. காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தி பெருகியது. மாற்று சாகுபடி முறைமை (Crop diversification) அதிகரித்தது. விவசாயிகள் வருமானம் அதிகரித்தது. வேளாண்மை துறை வளர்ச்சியில் கொண்டுவரப்பட்ட புரட்சிகர திட்டங்கள் வழியாக இந்திய உணவு பாதுகாப்பையும், தற்சார்பு நிலையும் எட்டியது. விவசாயிகள் வருமானம் அதிகரித்தது
ஏற்றுமதியில் ஏற்றம்

மருந்து பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் உலகின் மிகப்பெரிய நாடாக வளர்வதற்கு இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பரிசோதனை கூட்டங்கள் மற்றும் 1976 ஆம் ஆண்டின் காப்புரிமை திருத்தச் சட்டத்தின் விளைவுகளே அடிப்படை காரணம். அம்பானி, மிட்டல் போன்றோரின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் கூட இந்திய பொதுத்துறை தொழில் வளர்ச்சியே. அதேபோல், மிகச் சமீப காலம் வரை, பெரும் மின்சார நிலையங்களை ( Power plants) உலகம் முழுவதும் சப்ளை செய்பவர்களாகவும் நாம் இருந்தோம். உலகமயமாக்கல் விளைவுகளின் காரணமாக, மேற்குலக நாடுகள் மற்றும் சீனா இதில் தலையீடு செய்யும் வரை நாமே கணிசமான பங்களிப்பு செய்து வந்தோம்.
இதர அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனைகள்
1980ல் குடிநீர் பஞ்சத்தை போக்கவும் வறட்சியை குறைக்கவும் அமைக்கப்பட்ட ஆள்துளை கிணறுகள் .1983இல் அண்டார்டிகாவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், 1984 ல் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சி டாட் நிறுவனம். 1986 இல் உலகின் தனிப்பெரும் ரயில்வே சேவைக்கான பதிவை கணினி மையம். அதே 1986 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் பரிசோதனை குழாய் குழந்தை. 1991 ஆம் ஆண்டில் மரபணு ரேகைகளை குற்றவியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தொடங்கியது. 2014 ஆம் ஆண்டில், “போலியோ இல்லாத இந்தியா” என்ற நிலை, 2015 ஆம் ஆண்டில் ஆர்டிக் உற்றுநோக்கி நிலையம் ( Observatory) ஆகிய பல அறிவியல் முன்னேற்றங்களுக்கு அடிப்படை சுதந்திர போராட்ட தலைவர்களின் தொலை நோக்கு சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்ததும் பொதுத் துறை நிர்மாணமும் ஆகும்.
மாற்றங்களும் சவால்களும்
உலகமயமாக்கலுக்கு பின்னர், இந்திய திட்டக் குழுவின் செயல் பாட்டில் நோக்கங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டது. பின்னர், 2014ஆம் ஆண்டில் திட்ட குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் நடைமுறைக்கு வந்துள்ளது. உயர் கல்வி என்றாலே தனியார் என்னும் அளவுக்கு தனியார் துறையின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகை அதிகரித்துள்ளது. பெரிய, பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. தொழில்நுட்ப மாற்றம் என்னும் யுத்தி இன்றியே வெளிநாட்டு தொழில்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டன. தற்சார்பு என்பதன் பொருளே மாறிவிட்டது.
ஒரு பொருளின் இறுதி வடிவமைப்பு இந்தியாவில் நடந்தால் போதும். அதுவே தற்சார்பு எனப்படுகிறது. ஒரு பொருளின் அனைத்து பாகங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்தலே தற்சார்பு என்ற பொருள் திரிந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், அறிவுச் செல்வத்தின் வளர்ச்சிக்கும், குடிமக்களுக்கும் பங்கு இருந்தது. தற்போது தொழில் வளர்ச்சியும் மக்களின் அறிவு செல்வம் ஆக்கத்திற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டது.
இன்றைய உலகம் ஓர் டிஜிட்டல் சர்வாதிகார உலகம். உலகின் முதல் ஆறு பெரிய நிறுவனங்களில், முதலில் உள்ளவை டிஜிட்டல் நிறுவனங்களே. உலகின் ஆகப்பெரிய டிஜிட்டல் நிறுவனத்திடம் ஒரே ஒரு தொழிற்சாலை கூட இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஆப்பிள் போன் விற்பனையிலிருந்தும் ரூபாய் 300 அமெரிக்க டாலர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்று விடுகிறது. ஆனால், ஆப்பிள் ஐ போனை தயார் செய்யும் ஃபாக்ஸ் கான் நிறுவனத்திற்கு வெறும் ஏழு டாலர்கள் மட்டுமே சென்று சேர்கிறது.
கட்டுப்பாடு அற்ற நிதி மூலதனமே உலகமயமாக்கல் அதிகரித்து வருகிறது . அறிவியல் தொழில் நுட்பத்தின் மீதான அரசின் பிடி தளர்ந்து , தனியாரின் கைகள் ஓங்கி வருகிறது. புகழ் பெற்ற பிரஞ்சு நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி கூறிய “இந்தியா பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று, பில்லியனர் ராஜ்ஜியத்தில் சிக்கிக் கொண்டது” என்ற கூற்று உண்மையாகிவிடுமோ என்று பலர் அஞ்சுகின்றனர்.
இதற்கு சான்றாக கொரானா பெருந் தொற்று காலத்தில் அதிகரித்த 40 பில்லியனர்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேசமயம் , இதே பெருந் தொற்று காலத்தில் 84 விழுக்காடு இந்தியர்கள், முன்பு பெற்று வந்த வருவாயை இழந்துவிட்டனர். இவை எல்லாம் இனிவரும் காலகட்டத்தில் நாம் எதிர் நோக்கும் சவால்கள் இவை எல்லாவற்றையும் சமாளித்து மக்கள் முன்னேற முன்னேற்றம் அடைய வேண்டும் வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு

நா. மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கமல் ரசிகராக சந்தானத்தின் “பில்டப்”: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
நிர்மலா, யோகி வரை செல்வாக்கு… கௌதமியை ஏமாற்றிய ஆல் இன் ஆல் அழகப்பன் பின்னணி!
