நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கம் அமைக்க 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 24,375 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், மேலும் 15,700 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவத் துறையில் இது மிகப்பெரிய விரிவாக்கம்.
200 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட மருத்துவமனையுடன் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதேபோல், மேற்சிகிச்சைக்காக வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகளைப் பரிந்துரைக்கும் அரசு வட்டார மருத்துவமனைகளிலும், புதிதாக உருவாகும் மாவட்டங்களிலும் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்” என்றார்.
60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். “கரும்பு விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். 2019-20ஆம் ஆண்டுக்கான 6 மில்லியன் டன்னுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு 2019-20 மார்க்கெட்டிங் ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) ஒரு டன்னுக்கு மொத்தம் 10,448 ரூபாய் ஏற்றுமதி மானியம் வழங்கப்படும். இதனால் அரசுக்குக் கூடுதலாக ரூ.6,268 கோடி செலவாகும். சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கிக்ப்ப்ப கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்” என்றார்.
நிலக்கரி சுரங்கம் அமைக்க 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். “நிலக்கரி சுரங்கம் அமைக்க 100 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, நிலக்கரிச் சுரங்கம், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி ஆகிய துறைகளில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்](https://minnambalam.com/k/2019/08/28/48)**
**[லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/08/28/31)**
**[கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!](https://minnambalam.com/k/2019/08/27/53)**
**[வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?](https://minnambalam.com/k/2019/08/28/19)**
**[எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/08/28/36)**