உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானத்தில் உக்ரைன் கைதிகள் உட்பட 74 பேர் பலியானது திட்டமிடப்பட்ட சதியா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 விமானம், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
‘ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 விமானத்தில், 65 உக்ரைன் போர்க் கைதிகள், 6 பணியாளர்கள் உட்பட 74 பேர் பயணித்தனர்.
மேலும், அந்த விமானத்தில் ரஷ்யாவின் S-300 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டது.
பெல்கோரோட்டின் வடகிழக்கில் 70 கி.மீ தொலைவில் உள்ள யப்லோனோவோ கிராமத்திற்கு அருகே, அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அதிலிருந்தவர்களின் நிலை குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்துச் சிறப்பு ராணுவ அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின், “65 உக்ரேனிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை, உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த வீரர்களையே சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். இதில், மனிதாபிமான பணியை மேற்கொண்ட எங்கள் விமானிகளும் பலியாகியிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சில உள்ளூர் ஊடகங்களும், உக்ரைன் ராணுவத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றன. ஆனால், உக்ரைன் இதில் ஈடுபட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த தரவுகளும் இல்லை. இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் இந்த விபத்து திட்டமிடப்பட சதியாகவும் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: டூ இன் ஒன்… உள்ளே – வெளியே!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சேமியா பகளாபாத்
ஆம்னி அட்ராசிட்டீஸ்: கிளாம்பாக்கம் – தாம்பரம் செல்ல பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள்!