சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று (டிசம்பர் 30) நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 150 நாட்களாக மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, தலைமைச்செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 27ம் தேதி கோட்டைநோக்கி பேரணி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் முயன்றனர். அறிவாலயத்திற்கு முன்பு உள்ள அண்ணா சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திடீரென திரண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்களின் இந்த போராட்டங்களால் அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று 3 இடங்களிலும் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 700 தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
