உதவாத அபாய சங்கிலி : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பலி!

Published On:

| By christopher

சொந்த ஊரில் வளைகாப்பு நடத்துவதற்காக சென்னை – கொல்லம் விரைவு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கீழே தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்குமார் – கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆன நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் வளைகாப்பை தங்களது சொந்த ஊரில் நடத்துவதற்காக உறவினர்களுடன் நேற்று இரவு சென்னை – கொல்லம் விரைவு ரயிலில் சென்றுள்ளனர்.

ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி  வந்ததால் ரயிலின் படிக்கட்டு பகுதிக்கு சென்று கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

கஸ்தூரி கீழே விழுந்ததை கண்டு அலறிய உறவினர்கள் தாங்கள் வந்த S-9 பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அது செயல்படாததால் பக்கத்தில் இருந்த S-8 பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த உறவினர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால் அதுவும் செயல்படாததால் 5 கிலோ மீட்டர் தள்ளி பூவனூர் கிராமத்தில் ரயில் நின்றது. அங்கு உறவினர்கள் தேடியும் சில கிலோ மீட்டர் தூரம் ஓடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அடுத்து ரயில் நின்ற விருத்தாசலம் நிலைய ரயில்வே போலீசாரிடம் கஸ்தூரியை மீட்டுத் தருமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அங்கு  போலீசார் விரைந்து சென்று சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பிறகு படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த கஸ்தூரியின் உடலை சடலமாக மீட்டனர். அவரது உடலை விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு  சென்றனர்.

இதனை கண்டு கஸ்தூரியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

இதற்கிடையே அபாய சங்கிலி சரியாக செயல்பட்டு இருந்தால் உடனடியாக அவரை மீட்டு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே உத்தரவு!

கஸ்தூரி இறந்தது குறித்து விசாரணை நடத்த தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் இதற்கிடையே கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு (கோட்டாட்சியர்) விருத்தாசலம் ரெயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி கஸ்தூரியின் உறவினர்களிடம் திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன்,  விசாரணை நடத்த உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் எஸ்.ஐ.டி!

ப்ரிஜ் பூஷன் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக : சாக்‌ஷி மாலிக் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share