வேலுமணி வீட்டில் ரெய்டு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது!

Published On:

| By Kalai

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக 7 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவாளர்களை போலீஸ் குண்டுகட்டாக கைது செய்தது.

2016 முதல்  2018ம்  ஆண்டு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தபோது தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்,

ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போதைய சபாநாயகர் அப்பாவு 2019, 2020 என இருமுறை புகார் அளித்து இருந்தார். 

raid in sp velumani home

எஸ்.பி.வேலுமணிக்கு  நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்  வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் இன்று(செப்டம்பர் 13) கோவையில் 9 இடங்கள் உட்பட தமிழக முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம் உட்பட ஒன்பது இடங்களில் சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.

raid in sp velumani home

இதை தவிர்த்து எல்.இ.டி பல்புகள் கொள்முதல் செய்யப்பட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார்   உட்பட பலரும் தொண்டர்களுடன் குவிந்தனர்.

அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுப்பை ஏற்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

raid in sp velumani home

இதனால் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்-

அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், ஜெயராம் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை போலீஸ் குண்டுக்கட்டாக கைது செய்தது.  

ஏற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share