நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. Shivakumar says Delimitation number
இந்த கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது,
“தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம்!
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதற்காக நாம் இங்கே கூடியுள்ளோம். மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவம் சிதைந்துகொண்டிருக்கிறது.
மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக மேற்கொண்ட மாநிலங்களுக்கான தண்டனை தான் டிலிமிட்டேஷன். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
தென் மாநிலங்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

வட மாநிலத்தில் இருந்து இந்த கூட்டுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் ஒரு ரூபாய்க்கு 30 பைசாக்கள் மட்டுமே திருப்பி தருகிறார்கள். நாங்கள் தான் அதிகளவில் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம்.
இந்தியாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம்!
டிலிமிட்டேஷன் என்பது வெறும் எண்ணிக்கைக்கான போராட்டம் மட்டுமல்ல, இது எங்களின் அடையாளம், கலாச்சாரத்திற்கான போராட்டமாகும். தென் மாநிலங்கள் 1,500 ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. தென் மாநிலங்கள் என்பது இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
இது தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையிலான சண்டை இல்லை. இந்தியாவை மீட்டெடுப்பதற்கான போராட்டமாகும். இதை மத்திய அரசுக்கு தெளிவாக நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது என்பது தொடக்கம். ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பது, விவாதிப்பது என்பது முன்னேற்றம். அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்பது வெற்றி. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இங்கே நாங்கள் ஒன்றுகூடியிருக்கிறோம். தொடர்ந்து டிலிமிட்டேஷன் தொடர்பாக விவாதித்து நிச்சயமாக போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார். Shivakumar says Delimitation number