உத்தரபிரதேச மாநிலத்தில் சுனார் ரயில் நிலையத்தில், தண்டவாள பக்கத்தில் இருந்து இறங்கும் போது, மற்றொரு ரயில் மோதி ஆறு பெண் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் மிசார்பூர் மாவட்டம் சனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை காலை 9:30 மணியளவில் பிரயாக்ராஜ் – சோபன் எஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கிய பெண்கள் சிலர் படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்தனர்.
அப்போது அந்த வழியாக ஹவுரா கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது. அந்த ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற 6 பேர் மீது மோதியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சோன்பத்ராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்ததுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்கள் சவிதா (28), சாதனா, (16), ஷிவ் குமாரி (12), அஞ்சு தேவி (20), சுஷிலா தேவி (60), மற்றும் கலாவதி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததை ரயில்வே காவல் ஆய்வாளர் ராகவேந்திர சிங் உறுதிப்படுத்தினார்.
