கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த மே 1 முதல் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
பத்ம விபூஷன்
மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது.
அதே போல் மறைந்த மூத்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த கட்டிட நிபுணர் பாலகிருஷ்னா டோஷி உள்ளிட்ட 6 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரையுலகின் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ விருதை நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 91 பேர் பெறுகின்றனர்.
அவர்களில் தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் ஏழை குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகசேவைகளுக்காக கொடுத்த அய்யா பாலம் கல்யாண சுந்தரம் அவர்கள் பத்மஸ்ரீ விருதை பெற உள்ளார்.
அதே போல் மருத்துவத்துறையைச் சேர்ந்த கோபால்சாமி வேலுசாமி மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரும் பத்மஸ்ரீ விருதினை பெற உள்ளனர்.
அதன்படி 106 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் மொத்தம் 6 பேர் பத்ம விருதுகளை பெற தேர்வாகியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
புறக்கணிக்கும் கூட்டணிக் கட்சிகள், போனில் கூப்பிடும் ஆளுநர்: என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?
டிஜிட்டல் திண்ணை: வேட்பாளரை டெல்லிக்கு அனுப்பிய அண்ணாமலை- மக்களவைக்கும் கமலை புக் செய்த ஸ்டாலின்