வெங்காயம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலோ போதும்.
நமது அன்றாட உணவில் இருந்து வெங்காயத்தை மட்டும் தவிர்த்துவிடவே முடியாது. சட்னி, சாம்பார் என அனைத்து உணவு வகைகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான ஆற்றல் மேம்படுகிறது. நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வெங்காயம் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தங்களின் தினசரி உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக மற்ற காய்கறி, பழங்களை விட வெங்காயத்தை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் வைக்கலாம். ஆனால், குளிர்காலத்தில் வெங்காயம் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. வெங்காயம் சீக்கிரமாகவே முளைத்துவிட்டது என்று பலரும் புகார் கூறுவதையும் நாம் பார்க்கிறோம். ஆகவே, குளிர்காலம் உள்பட வெங்காயம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க சில ஈஸியான டிப்ஸை பார்க்கலாம்.
வெங்காயத்தை வெதுவெதுப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்
கடைகளில் வாங்கும் வெங்காயத்தை ஈரப்பதம் இல்லாத இடத்தில்தான் வைக்க வேண்டும். ஈரப்பதம் என்பது வெங்காயத்தை விரைவாக அழுகச் செய்துவிடும். குளிர்காலத்தில், வீட்டு அறையில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆகவே, வெங்காயத்தை சமையலறையின் ஒரு மூலையில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதனால் சற்று வெப்பநிலை கிடைத்து வெங்காயம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
பிளாஸ்டிக் பைகளில் வைக்க வேண்டாம்
வெங்காயத்தை ஒருபோதும் பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்க வேண்டாம். பிளாஸ்டிக் காற்று உள்ளே புகுவதை தடுக்கிறது. இதனால் ஈரப்பதத்தை அதிகரிப்பதால் வெங்காயம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புகள் உள்ளது. அதற்கு பதிலாக, வெங்காயத்தை சணல் பைகள், வலைப் பைகள் அல்லது கூடைகள் என காற்றோட்டமுள்ள பைகளில் சேமித்து வைக்கலாம்.
வெயிலில் காய வைக்கலாம்
வெங்காயம் சற்று ஈரமாக இருந்தால் அவற்றை சேமித்து வைப்பதற்கு முன்பாக வெயிலில் சற்று காய வைக்கலாம். அப்படி செய்யும்போது வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்துவிடும். நீண்ட நாட்களுக்கு வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும்.
வெங்காயம் அழுகியிருந்தால் உடனே அகற்ற வேண்டும்
சேமித்து வைத்திருக்கும் வெங்காயங்களில் ஏதேனும் ஒரு அழுகிய வெங்காயம் இருந்தாலும் கூட உடனடியாக அதனை அகற்றிவிட வேண்டும். ஒரு அழுகிய வெங்காயம் மீதமுள்ள நல்ல வெங்காயங்களையும் கெட்டுபோகச் செய்துவிடும். ஆகவே, சேமிப்பில் உள்ள வெங்காயத்தில் ஏதேனும் அழுகியுள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ப்ரிட்ஜில் வைக்கவே வேண்டாம்
ப்ரிட்ஜில் வெங்காயத்தை வைத்தால் அது மென்மையாகி விரைவாக கெட்டுவிட வாய்ப்புகள் அதிகம். அத்துடன், ப்ரிட்ஜில் உள்ள ஈரப்பதம் வெங்காயத்திற்கு நல்லதல்ல. எப்போதும் சற்று வெப்பநிலை இருக்கும் இடத்தில்தான் வெங்காயத்தை சேமித்து வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்குடன் வெங்காயத்தை சேர்த்து வைத்திருக்க வேண்டாம்
பலர் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது தவறான முறையாகும். உருளைக் கிழங்கில் இருந்து வெளியாகும் வாயு வெங்காயத்தை விரைவாக கெடச் செய்துவிடும். ஆகவே, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் என இரண்டையும் தனித்தனியாக சேமித்து வைக்க வேண்டும்.
