மாதுளம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாதுளையின் பயன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மாதுளை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது. மாதுளம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது மாதுளம்பழம். மாதுளம் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.
சராசரியாக ஒரு மாதுளையில் 234 கலோரிகள் உள்ளன. 4.7 கிராம் புரதம், 3.3 கிராம் கொழுப்பு, 52 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 11.3 கிராம் நார்ச்சத்துகளும் உள்ளன. இதுதவிர வைட்டமின் டி, பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளையில் கலோரிகள், கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவிலும் உள்ளன.
இதயப் பிரச்னை வராமல் தடுக்கிறது
இதயப் பிரச்னை, ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்படுபவர்கள் நாள்தோறும் ஒரு மாதுளைப்பழம் சாப்பிட்டலாம். மாதுளை சாப்பிடுவதால் உடலில் நைட்ரிக் அமிலம் அதிகரித்து, ரத்த அழுத்தம் சீராக மாறுகிறது. மாதுளை சாப்பிடுவது கெட்ட (LDL) கொழுப்பைக் குறைக்கவும், நல்ல (HDL) கொழுப்பை அதிகரிக்கவும் உதவும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. இதயப் பிரச்னை வருவதை தடுக்கும் பண்புகளும் மாதுளைக்கு உள்ளன.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் மாதுளம்பழத்திற்கு இருக்கிறது. மாதுளை சாறு சில புற்றுநோய் ஸ்டெம் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்புகள் மாதுளைக்கு உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டுள்ள மாதுளை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொற்றுகள், நோய்களை எதிர்த்து போராடும் வலிமையை மாதுளை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் பண்புகளும் மாதுளைக்கு உள்ளது.
சருமத்தை பாதுகாக்கிறது
மாதுளையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. இது கொலாஜனை அதிகரிப்பதன் மூலம் சுருக்கங்கள் உள்ளிட்ட வயதானது போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. சூரிய ஒளியின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. கரும்புள்ளிகளை மறைப்பதன் மூலம் சருமத்தை பிரகாசமாக மாற்றுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது, அறிவாற்றல் அதிகரிக்கிறது
மாதுளம்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனால் செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கலையும் தடுக்கிறது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, நினைவாற்றலை அதிகரிக்கவும் மாதுளம் பழங்கள் உதவுகின்றன.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
மாதுளையில் உள்ள பினாலிக் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மாதுளைக்கு உள்ளது. எனினும், மருத்துவர்களை கலந்தாலோசித்த பின்னர் மாதுளையை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்வது நல்லது.
