காசாவில் 6 பத்திரிகையாளர்கள் பலி… இஸ்ரேல் அட்டூழியம் : குவியும் கண்டனம்!

Published On:

| By Minnambalam Desk

6 journalists killed in Gaza by Israel army

காசாவில் மருத்துவ வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்ஜசீரா புகைப்படக் செய்தியாளர் முகம்மது சலாமா உள்பட 6 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் அங்கு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் மருத்துவமனையின் நான்காவது மாடியில் நடைபெற்றது. முதலில் ஒரு ஏவுகணை வீசப்பட்டு, சில நிமிடங்களில் மீட்புக்குழுக்கள் வந்து சேர்ந்தபோது மறுமுறை ஏவுகணை வீசப்பட்டு “இரட்டைத் தாக்குதல்” நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

யார் அந்த 6 பத்திரிகையாளர்கள்!

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ராய்ட்டர்ஸ் புகைப்படக் செய்தியாளர் ஹுஸ்சாம் அல்-மஸ்ரி, பல ஊடகங்களில் பணியாற்றிய மரியம் அபு தக்கா (Independent Arabic, AP உள்ளிட்ட நிறுவனங்கள்), மற்றும் செய்தியாளர் மோஆஸ் அபு தாஹா ஆகியோர் அடங்குவர்,

இதேபோல், Quds Feed Network மற்றும் Middle East Eye உட்பட பல ஊடகங்களில் பணியாற்றிய அகமத் அபு அசீஸ் படுகாயம் அடைந்து உயிரிழந்ததார்

ADVERTISEMENT

அதே நாளில், கான் யூனிஸில் தனியே நடந்த இன்னொரு சம்பவத்தில், இஸ்ரேலிய படைகள் அல்-ஹயாத் அல்-ஜதிதா பத்திரிகைக்கான நிருபர் மற்றும் கல்வியாளர் ஹசன் தௌஹான் என்பவரையும் சுட்டுக் கொன்றன. இதன் மூலம் அன்றைய தினத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

உண்மையை புதைக்க தாக்குதல்!

காசா ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “கான் யூனிஸ் ஆளுநரகத்தில் உள்ள நாசர் மருத்துவமனையில் செய்தி சேகரிப்பு பணியில் இருந்த எங்கள் பத்திரிகையாளர் சகாக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொடூர குற்றத்தை நிகழ்த்தின. பல பத்திரிகையாளர்கள் வீரச் சாவடைந்தனர். இந்த மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பூரண பொறுப்பு இஸ்ரேல், அமெரிக்க நிர்வாகம் மற்றும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் மீது உள்ளது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராய்ட்டர்ஸ் தெரிவித்ததாவது, தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில், புகைப்படக் கலைஞர் அல்-மஸ்ரி இயக்கியிருந்த மருத்துவமனையின் நேரடி ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

அல்ஜசீரா இந்த தாக்குதலை “உண்மையை புதைக்கும் நோக்கம்” என கண்டித்துள்ளது.

“எங்கள் பத்திரிகையாளர்களின் இரத்தம் இன்னும் வறண்டு விடவில்லை. ஆனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் எங்கள் ஒளிப்பதிவாளர் முகம்மது சலாமாவையும், மற்ற மூன்று புகைப்பட பத்திரிகையாளர்களையும் கொன்றன” என்று அந்த வலைத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், “இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் படுகொலையின் போது, இஸ்ரேல் பன்னாட்டு ஊடகங்களை காசாவில் நுழையத் தடைசெய்திருந்தாலும், அல்ஜசீரா நின்றுவிடாமல் உண்மையைக் காட்டி வருகிறது” என தெரிவித்தது.

சலாமா தனது சக பத்திரிகையாளர் ஹலா அஸ்ஃபூருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தார்; ceasefire பிறகு திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். மரியம் அபு தக்கா தனது 12 வயது மகனை விட்டு நீங்கினார்; அவர் முன்பே காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் என AP ஆசிரியர் அப்பி ஸிவெல் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்!

இது இரண்டு வாரங்களுக்கு முன் கொல்லப்பட்ட புகழ்பெற்ற அல்ஜசீரா பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷரிஃப் சம்பவத்திற்கு பின் நடந்துள்ளது. அப்போது அவர் அல்ஷிபா மருத்துவமனைக்கு முன்பு உயிரிழந்தார்.

அதன் பிறகு, 2023 அக்டோபர் 7 முதல் இன்றுவரை காசாவில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குறைந்தது 273 ஆக உயர்ந்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பதில்!

நாசர் மருத்துவமனைக்கு அருகே தாக்குதல் நடத்தியதாகவும், பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம், அதேநேரத்தில் தாக்குதலுக்கான குறிக்கோள் என்ன என்பது விளக்கப்படவில்லை.

பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “நாசர் மருத்துவமனையில் நடந்த இந்த துயரகரமான தவறு குறித்து நாங்கள் வருந்துகிறோம். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் பணியை மதிக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இஸ்ரேலின் முந்தைய விசாரணைகள் பெரும்பாலும் எவ்வித தண்டனையுமின்றி முடிந்ததாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதே போன்று மருத்துவமனைகளில் போராளிகள் செயல்படுகிறார்கள் என இஸ்ரேல் கூறினாலும், ஆதாரம் ஒருபோதும் வழங்கப்பட்டதே இல்லை என தெரிவிக்கின்றனர்.

சர்வதேச கண்டனம்!

அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது கண்டன அறிக்கையில், “நவீன காலத்து எந்தப் போர் நிலையும் இவ்வளவு அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைக் காணவில்லை. காசா மீது நடக்கும் இஸ்ரேலின் படுகொலைதான் அதிக பத்திரிகையாளர்களின் உயிரை பறித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

காசா போர் துவங்கி கடந்த 22 மாதங்களில் இதுவரை 62,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளார்கள். அதில் பாதிக்கு மேல் பெண்கள், குழந்தைகள். இதற்காக, பிரதமர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share