மதுரை வரும் பிரதமர்!

Published On:

| By Balaji

வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகிவருகின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், பிரச்சாரத்திற்காகவும் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தற்போது தமிழிசை உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தி.நகரிலுள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று (ஜனவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி மதுரைக்கு வர இருப்பதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் வந்திருக்கிறது. இதற்கு முன்பு பிரதமரின் வருகை என்பது யூகமாக இருந்துகொண்டிருந்தது. ஆனால் பிரதமரின் நிகழ்வுகளை வடிவமைக்கும் பாஜகவின் பொதுச் செயலாளர், பிரதமரின் வருகை குறித்து இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

மோடி வரும்போது பல லட்சம் தொண்டர்களைத் திரட்டி மிகப்பெரிய மாநாட்டை நடத்த இருப்பதாகவும், மத்திய அரசின் மூலம் தமிழகம் பல திட்டங்களை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் தற்போதைய வருகை மேலும் பல திட்டங்கள் வருவதற்கு பேருதவியாக இருக்கும் என்றும், தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகத்தைத் தரும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

ADVERTISEMENT

திருவாரூர் இடைத் தேர்தல் குறித்த கேள்விக்கு, “எங்களின் முழுக் கவனமும் பிரதமரின் வருகை குறித்தும், மக்களவைத் தேர்தலுக்கு எங்களை தயார் செய்வதிலும் மட்டுமே உள்ளது. வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை நடைபெறும் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.

பிரதமர் மதுரை வரவுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்காக அவரின் வருகை இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share