கேரள ரயில்கள் ரத்து!

By Balaji

|

Published on 17 Aug 2018, 12:00 AM

கேரளாவிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ஏதுவாக இன்று (ஆகஸ்ட் 17) சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து, கேரளாவுக்குச் செல்லும் ரயில்கள் மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பெருமழை காரணமாக, கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஓடுதளங்களில் தண்ணீர் தேங்கியதால் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் சாலைகளும் பாதிப்படைந்துள்ளது. இதேபோல் ரயில் தண்டவாளங்களும் நீரினால் சூழப்பட்டிருப்பதால் ரயில்கள் உட்பட மாநிலத்தின் அனைத்துப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கேரள மக்கள் பயன்பெறும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (17.08.2018) கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. இந்த ரயில், ஆலப்புழாவில் வழியாக கொல்லம், திருவனந்தபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். மாலை 6 மணி அளவில் கேரளத்திலிருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

**சென்னையிலிருந்து கேரளாவுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:**

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்,

தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில்,

ADVERTISEMENT

சென்ட்ரல் – மங்களூரு விரைவு ரயில்கள்

ரயில் எண் 12624 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் மெயில்,

ரயில் எண் 12623 சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் மெயில்,

ரயில் எண் 12601 சென்னை சென்ட்ரல்- மங்களூரு மெயில்,

ரயில் எண் 22638 மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு வண்டி,

ரயில் எண் 12686 மங்களூரு- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்.

இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாலக்காடு வரை இயங்கும் என்றும் மங்களூரு செல்லும் ரயில் கோழிக்கோடு வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel