கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும், இன்னும் சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேல்தான் இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும், தடுப்பு வழிமுறைகளை கைவிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, முகக்கவசம், சானிடைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், மேற்குறிப்பிட்ட பொருட்களை அதிக விலையில் விற்கபடுவதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அந்தப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
கிருமிநாசினி (200 மில்லி லிட்டர் ) – ரூ.110
N95 முகக்கவசம் – ரூ.22
கையுறை – ரூ.15
பிபிஇ கிட் – ரூ.273.
இரண்டு அடுக்கு முகக்கவசம்- ரூ.3,
மூன்றடுக்கு முகக்கவசம் – ரூ. 4
சர்ஜிக்கல் முகக்கவசம் – ரூ.4.50
ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் விலை- ரூ.12
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுன் – ரூ.65
ஆக்சிஜன் முகக்கவசம் –ரூ.54
பல்ஸ் மீட்டர் –ரூ.1500
Sterile கையுறை – ரூ.15
பேஸ் ஷீல்டு – ரூ.21
என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
N95 முகக்கவசம் மொத்தவிலை கடைகளிலே ரூ.35க்கு விற்கப்படுகிறது. அந்த விலையில் தற்போது முகக்கவசத்தை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளோம். திடீரென்று முகக்கவசத்தின் விலை ரூ.22 என்று அறிவித்தால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால், குறைந்தது ரூ.40 என்று விலை நிர்ணயம் செய்தாலாவது நாங்கள் பிழைத்துக் கொள்வோம் என முகக்கவச வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நமது அண்டை மாநிலமான கேரளாவிலும். கொரோனா தடுப்பு பொருட்களான பிபிஇ கிட் – ரூ. 273, என்95 முகக்கவசம் – ரூ.22, மூன்று அடுக்கு முகக்கவசம் – ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”