இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்!

Published On:

| By Balaji

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வருகை புரியும் பயணிகள் கட்டாயம் 12 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருகை தரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வருகை புரியும் பயணிகள் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்ததும் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபி வருவதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் அங்கிருந்து வரும் விமான பயணிகள் கட்டாயம் அமீரகத்தில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது 14 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு விமான பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது.

இதில் விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு சோதனை நிறைவு பெற்றதும் அவர்களுக்கு மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு தங்களை அவர்கள் 12 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் ஆறாவது நாளில் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையும், பிறகு 11ஆவது நாளில் பி.சி.ஆர் பரிசோதனையும் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும்.

மேலும் துபாயில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபிக்கு வர தடையில்லை. முன்னதாக அந்தந்தப் பகுதிகளில் விசா பெற்றவர்கள் மட்டுமே குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டு இருந்தநிலையில், தற்போது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share