சிறப்புக் கட்டுரை: கல்வி அகதிகளை உருவாக்காதீர்கள்!

Published On:

| By Balaji

ராஜன் குறை

அகதி என்ற சொல்லுக்கு கதியற்றவர், அதாவது எங்கே செல்வது என அறியாதவர் என்று பொருள். கற்கும் பருவத்தில் கல்விப் பயணம் தடைபட்டு, குழம்பி எங்கே செல்வது என அறியாமல் போகும் நிலை அகதியின் நிலைதானே. மேலும் அகதிகளுக்கும், குடிமக்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இருவகையினருமே ஒரு தேசத்தில் வசித்தாலும் குடிமக்களுக்கு உள்ள உரிமைகள் சலுகைகள் பல அகதிகளுக்குக் கிடைக்காது. குடியிருப்பார்கள், ஆனால் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலை அகதிகளுக்கு ஏற்படும். அதுவும் சட்டபூர்வமாக அகதியாகவும் அங்கீகரிக்கப்படாமல் குடியேறிவிட்டவர்கள் நிலை மிகவும் மோசம். கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டே வாழ வேண்டும்.

தமிழக அரசு இன்று செயல்படுத்த முனைந்திருக்கும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் என்ற புதிய செயல்முறை கல்வி அகதிகளை உள்நாட்டிலேயே உருவாக்கிவிடும். இரண்டாம்தர குடிமக்களை, வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத்திற்கு சாத்தியமில்லாத ஒரு மக்கள் தொகுதியை உருவாக்குவதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டதுதான் இந்த திட்டம். பழைய ஜாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு புதிய வடிவம் கொடுப்பது என்றும் கூறலாம். புதிய குலக்கல்வி திட்டம் என்பது சரியான வர்ணனை. அன்று பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கியாக தீயாக எதிர்த்து இயங்கி கல்வி உரிமைகளை காத்தனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பள்ளி இறுதி பொதுத்தேர்வு ஏன்?

எதற்காக பொதுத்தேர்வு என்பது தேவைப்படுகிறது என்பதே முதல் கேள்வி. உதாரணமாக பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் பொதுத் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இவை எதனால் தேவைப்படுகின்றன? ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்தில் வழங்கும் பாடத்திட்டத்தில், உதாரணமாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தர வரிசைப்படுத்துவதுதான் பொதுத் தேர்வின் நோக்கம். கோவையில் பயிலும் ஒரு மாணவன், தூத்துக்குடியில் பயிலும் ஒரு மாணவி என அனைவரும் ஒரே பள்ளி இறுதித் தேர்வை எழுதும்போது அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அவர்கள் எந்த அளவு கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை அனைவருக்கும் தெளிவாக்கும். இருவரும் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மேற்படிப்புக்கு விண்ணப்பித்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் முன்னுரிமை பெறுவதோ அல்லது வேறு நேர்காணல்/ நுழைவுத் தேர்வு நிகழாத சமயத்தில் நேரடியாக அனுமதிக்கப் படுவதோ நிகழலாம். முன்னொரு காலத்தில் தபால் தந்தி இலாக்காவில் பணி நியமனமே பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் செய்யப்பட்டது. வேறு எந்த நுழைவுத் தேர்வும், நேர்காணலும் கிடையாது.

மாநில அளவிலான எஸ்.எஸ்.எல்.சி என்ற பள்ளிக்கல்வி நிறைவுத் தேர்வின் மதிப்பெண் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருந்தது. அதனால் பள்ளிகள் மிகுந்த கவனத்துடன் மாணவர்களை தேர்விற்கு தயார் செய்வார்கள். மாணாக்கர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். மாணாக்கர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். மாணாக்கர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வதும், மேற்படிப்பு மற்றும் பணிகளுக்குச் செல்வதும் மொத்த குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிகவும் தேவையானதாக இருக்கும் என்பதால் பெரியதொரு கவலை தரும் நிகழ்வாக இந்த பொதுத்தேர்வு மாறிவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறாதவர்கள், அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வது, வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வது என்பது போன்ற விபரீத விளைவுகள் ஏற்படும். பதினைந்து அல்லது பதினாறு வயதில் ஒரு நபரின் எதிர்காலமே முடிவு செய்யப்பட்டு விடும்.

கல்வியை விட தேர்வே முக்கியமா?

இந்த பள்ளி இறுதி பொதுத்தேர்வு என்பது ஒருவகையில் தவிர்க்க முடியாதது என்பதும் உண்மைதான். ஏனெனில் அந்தந்த பள்ளிகளே தேர்வினை நடத்தினால் உள்ளூரில் நிலவும் அழுத்தங்களுக்குப் பணிந்து சில மாணவர்களுக்குத் தகுதிக்கு மீறிய மதிப்பெண்கள் தருவதும், சிலருக்கு குறைத்த மதிப்பெண் தருவதும் சாத்தியம். நிலவுடமை, ஜாதியச் சமூகத்தில் உள்ளூர் அதிகாரமென்பது பல இடங்களில் அறமற்று செயல்படுவது சாத்தியம். அதனால் பொதுத்தேர்வு என்ற நடைமுறை அது போன்ற ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் வாய்ப்புள்ளது. பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகமும் கூட மாணவர்களின் தேர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்பதால் அனைத்து மாணவர்களின் கல்வித் தேர்ச்சியில் கவனமாக இருப்பார்கள் எனலாம்.

இது போன்ற நன்மைகள் சில இருந்தாலும், கல்வியைவிட தேர்வே முக்கியம் என்ற மனப்போக்கு உருவாகவும், எப்படியாவது தேர்வில் மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று அதற்கு உதவாத அல்லது அதிகம் உதவாத கல்வி அம்சங்களை, திறன்களை புறக்கணிப்பதும் கணிசமான சமூகத் தீமையை உருவாக்கின. உதாரணமாக வரலாற்றுப் பாடம் என்றால், நிகழ்வுகளை குறித்து சிந்திப்பதைவிட தகவல்களை மனனம் செய்வதே முக்கியம் என்ற எண்ணம் தோன்றும். கணிதத்தில் இயங்கும் தர்க்கத்தை விட, சரியான விடையை கணக்கிடுவதே முக்கியமாக மாறும்.

இப்படி சாதக பாதகங்களை கூட்டிக் கழித்து பார்த்தால், பள்ளி இறுதி பொதுத்தேர்வு என்பது இப்போதைக்குத் தவிர்க்க முடியாதது என்று கூறலாம். மேற்படிப்பு, பணித்தேர்வு என பல வாழ்வியல் திட்டமிடலை மேற்கொள்ள பள்ளி இறுதி பொதுத்தேர்வு ஒருவரை தயார் செய்கிறது. இது சமூக ஏற்றத்தாழ்வை முற்றிலும் சமன் செய்யாவிட்டாலும், பலருக்கு முன்னேறும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

இடைநிலை பொதுத்தேர்வுகள் தேவையா?

பள்ளி இறுதி பொதுத்தேர்வுகளுக்கு வழங்கக் கூடிய நியாயத்தை இடைநிலையில் ஐந்து, எட்டு வகுப்புகளில் வைக்கப்படும் பொதுத்தேர்வுகளுக்கு வழங்க முடியுமா என்பதே கேள்வி. நிச்சயம் வழங்க முடியாது; கூடாது. இவை முற்றிலும் தீங்கு பயக்கும் என்பதைத் தவிர நன்மை எதுவும் இருக்க முடியாது. ஏனென்று பார்ப்போம்.

பள்ளி இறுதிவரை அனைவருக்கும் இருக்க வேண்டிய கல்வி கற்கும் உரிமையை இந்த தேர்வுகள் சீரழிக்கும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கல்வி கற்பதிலிருந்து அந்நியப்படுவார்கள். அவர்கள் கல்வியில் தொடர்வது பொருளற்றுப் போகும். பொதுத் தேர்வு என்பதன் தரநிர்ணயம் அத்தகையது. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, குறைந்த மதிப்பெண் பெற்றாலோ அந்த மாணவர்கள் தொடர்ந்து பயில்வது சமூக ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் என்பதே யதார்த்தம்.

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் அதற்குத் தக்கபடி கடும் பயிற்சி செய்து பின்னால் பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறலாம் என யாராவது சொல்லக்கூடும். இது நடைமுறையில் மிகவும் கடினமானது. ஏனெனில் பள்ளி அளவில் தேர்வு நடக்கும்போது மதிப்பெண் வேறுபாடு பெரிதாகத் தெரியாது. மாநில அளவில் மதிப்பெண்கள் தொகுக்கப்படும்போது அது ஒரு முத்திரையாகவே மாறிவிடும். உளவியல் ரீதியாக அது குழந்தை, பெற்றோர், சக மாணாக்கர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் கட்டுப்படுத்தும் குறியீடாகிவிடும்.

தனிப்பட்ட மாணவர்களின் தேர்வு எழுதும் திறன், பாடத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உட்செரிக்கும் திறன் ஆகியவை எப்போது உருவாகின்றன, சீர்பெறுகின்றன என்பது வேறுபடும். ஒரு சிலர் வெகுகாலம் “விளையாட்டுத்தனமாகவே” இருப்பார்கள். மெள்ள மெள்ளத்தான் தேர்வுகளை எதிர்கொள்வதில் கவனம் பெறுவார்கள். ஐந்தாம் வகுப்பில், எட்டாம் வகுப்பில் பள்ளியளவில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெறுபவர் பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில் விழித்துக்கொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெறுவது பரவலான நடைமுறை. ஆனால் பள்ளி அளவிலான தேர்வுகளை பொதுத்தேர்வுகளாக மாற்றினால் அந்த மதிப்பெண்கள் அவர்கள் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும்.

குலக்கல்வியும் கல்வி அகதிகளும்

கற்கும் திறன் முதிர்ச்சியடைவதற்கும் சமூக, பொருளாதார காரணிகளுக்கும் நேரடி தொடர்பு உண்டு. பெற்றோர் நன்கு கற்றவர்களாக இருக்கும் வீடுகளில் குழந்தைகள் சுலபமாகக் கல்விக்கு தயாராகிவிடும். ஆனால் பெற்றோர்களே சரிவர கல்வி பெறாதவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு அதிக காலம் தேவைப்படும். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு வைக்கப்பட்டால் அவர்கள் கல்வி ஆற்றல் தர நிர்ணயம் பெற்றுவிடும். இது பெரும்பாலும் பெற்றோர்களின் கல்வித் தேர்ச்சியை ஒட்டியே அமையும் என்பதால் குலக்கல்வி அம்சம் புகுந்துவிடும்.

பள்ளி இறுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதற்கு ஏற்ப தொழிற்கல்வியிலோ, தொழில்களிலோ, விவசாயம் உள்ளிட்ட ஊதியம் தரும் பணிகளிலோ ஈடுபடுவார்கள். ஆனால் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக்கல்வி பெற்றதனால் ஓரளவு பொது அறிவு உள்ளவர்களாகவும், சமூக திறன் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்கள் குழந்தைகள் பின்னாளில் அதிக தேர்ச்சி பெற உதவும் என்பது மட்டுமன்றி, குடிமைச் சமூகம் வலுப்பெறவும் உதவும். ஆனால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் தர நிர்ணயம் செய்யப்பட்டால் அவர்கள் கல்வியிலிருந்து அந்நியமாகி, எதிர்காலம் என்னவென்று தெரியாமல் சீரழியும் வாய்ப்புகளே அதிகம்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும், பயனடையும் சாத்தியங்களை மக்களாட்சி அரசியலின் அங்கமாக மாற்றிக் காட்டியுள்ளது தமிழகம் எனலாம். பல்வேறு சமூக பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு கல்வித்துறையில் தொடர்ந்து அனைவரையும் உள்ளெடுக்கும் தன்மை சாத்தியமானதே காரணம். பல வட இந்திய மாநிலங்களில் இது நிகழவில்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்து. அதன் காரணமாகவே தமிழகம் இந்த விஷப் பரீட்சைக்கான பரிசோதனைக் கூடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்துக் கேட்கும் வலிமையில்லாத, அரசியல் ரீதியாக பலவீனமான எடப்பாடி அரசு மிகப்பெரிய துரோகத்தைத் தமிழக மக்களுக்கு செய்ய முன்வந்துள்ளது.

இந்த இடைநிலை பொதுத்தேர்வின் ஆபத்தை உணராத ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும். அவர்களிடையேயிருந்து கணிசமான எதிர்ப்புக்குரல் வெளிப்படும்போதுதான் அரசியல் கட்சிகள் தீவிர எதிர்ப்பை காட்டத் துவங்கும்.

எப்படியாவது தங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வித் தேர்ச்சி பெறமாட்டார்களா என்ற ஏக்கத்தில் எளிய மனம் கொண்ட பெற்றோரும், இந்த தேர்வுகளையொட்டி தங்கள் பணிக்கு ஏற்படக்கூடிய மதிப்பை எண்ணி மயங்கக் கூடிய சில ஆசிரியர்களும், விளைவுகள் அறியா பிள்ளைப் பருவ மாணவர்களும் உடனடியாக இந்த பேராபத்தின் தன்மை அறிந்து எதிர்க்க முன்வரவேண்டும். அரசியல் இயக்கங்கள் அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும். பள்ளிப்பருவ இடைநிலை பொதுத்தேர்வுகள் தேவையில்லை. கல்வி அகதிகளை உருவாக்காதீர்கள்!

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share