ஒரே வாரத்தில் 58 மீனவர்கள் கைது : மத்திய அரசுக்கு அன்புமணி கடிதம்!

Published On:

| By christopher

கடந்த ஒரு வாரத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 58 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைப் பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மார்ச் 10ஆம் தேதி வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும், 15ஆம் தேதி 15 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதனை மீறி இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மறுபுறம், தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா-இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்து 

கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மார்க்சிஸ்ட் கட்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share