இந்தியாவில் அவசர நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு- ஜனநாயக பாதுகாவலர்களுக்கு மோடி நன்றி!

Published On:

| By Minnambalam Desk

Emergency 1975

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று ஜூன் 25, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். Emergency India Modi

இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். தமிழ்நாட்டிலும் அடக்குமுறைகள் அன்று தலைவிரித்தாடின. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை எதிர்கொண்டனர்.

ADVERTISEMENT

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்ட நாள், அரசியல் சாசனப் படுகொலை நாள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றில் 50 ஆண்டுகளை இந்த நாள் குறிக்கிறது. இந்திய மக்கள் இந்த தினத்தை அரசியல் சட்ட படுகொலை தினம் என குறிப்பிடுகிறார்கள். இந்நாளில் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்த மாண்புகள் கைவிடப்பட்டன, அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, பல அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சாமானிய மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருந்த அந்த காலகட்டம் ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டதாக இருந்தது.”

ADVERTISEMENT

நமது அரசியல் சட்ட உணர்வு மதிக்கப்படாத நிலையை, நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டதை, நீதிமன்றங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியை இந்தியர் எவரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு 42-வது திருத்தம் முதன்மையான உதாரணமாகும். ஏழை எளிய, விளிம்புநிலை மக்கள் குறி வைக்கப்பட்டதோடு அவர்களின் கௌரவமும் பாதிக்கப்பட்டது.
நமது அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் நாம் வலியுறுத்துவோம். நமது வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடைவோம். ஏழை எளிய மக்களின் கனவுகளை நனவாக்குவோம்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது நான் ஆர்எஸ்எஸ்-ல் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் எனக்கு ஓர் அனுபவ பாடமாக இருந்தது. நமது ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாக்கும் உணர்வை அது வலுப்படுத்தியது. அதே சமயம், பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களின் அனுபவங்களில் சில புத்தக வடிவில் புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் தொகுத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தாமே ஒரு வீரராக இருந்த தேவகௌடா இதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அவசரநிலை ஆண்டுகளின் போது எனது பயணத்தை ‘அவசரநிலை நாட்குறிப்புகள்’ வரிசைப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் பல நினைவுகளை அது மீண்டும் கொண்டுவருகிறது.

அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களை நினைவில் வைத்துள்ளவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களின் பாதிப்புகளை அறிந்தவர்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசியல் சாசனப் படுகொலை நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: பாரதத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50வது ஆண்டு நினைவு தினம் இன்று. 1975 ஆம் ஆண்டு இந்த கருப்பு நாளில் பாரதத்தில் ஜனநாயகம் கொல்லப்பட்டது, பாரத அரசமைப்பு நசுக்கப்பட்டது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டன, நீதித்துறை நிர்வாகத்திற்கு அடிபணிந்தது, பத்திரிகைகள் முற்றிலுமாக வாயடைக்கப்பட்டன, லட்சக்கணக்கான தேசியவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் வளாகங்களை ஆக்கிரமித்தனர். ஒரு பல்கலைக்கழக மாணவனாக நான் எனது விடுதி அறையை காலி செய்யாததற்காக துப்பாக்கியைக் கொண்டு அடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டேன். பாதுகாப்பற்ற பிரதமர் அரசமைப்பையும் அரசியலமைப்பு வழங்கிய பாதுகாப்புகளையும் காற்றில் பறக்கவிட்டு, அதிகாரத்திற்காக முழு தேசம் மற்றும் ஜனநாயகத்தின் தலைவிதியை முடிக்க முயன்ற அந்த அதிர்ச்சிகரமான நாட்களை நாம் மறந்துவிடக் கூடாது. தங்கள் இன்னுயிரையும் தங்கள் குடும்பத்தினரையும் பணயம் வைத்து கொடூரமான சர்வாதிகாரத்தை கடுமையாக எதிர்த்து அது தழைக்க முடியாததாக மாற்றிய லட்சக்கணக்கான நமது துணிச்சலான தேசத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனது பணிவான மற்றும் மனமார்ந்த அஞ்சலி மற்றும் வணக்கத்தை செலுத்துகிறேன். சர்வாதிகாரம் ஓங்க முடியாமல் நாட்டில் ஜனநாயகம் திரும்பியது. அதற்குக் காரணமானவர்களின் தியாகங்களுக்கு நன்றி. பாரத அரசமைப்பை எந்த விலை கொடுத்தேனும் பாதுகாக்கவும், யாரும் அதை அவமதிக்கவும் துணியக்கூடாது என்பதையும், மகத்தான தேசம் ஒருபோதும் அத்தகைய கருப்பு நாளை அனுபவிக்கக்கூடாது என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்வோம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share