தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.
தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர். அவரது நடிப்பில் 14 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த மே 23 ஆம் தேதி வெளியானது ‘சாமானியன்’ படம்
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப்படத்தை மதியழகன் தயாரிக்க படத்தை ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார்.
ராமராஜனின் படங்களில் வெற்றிக்கு தூணான இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே படங்கள் தியேட்டரை விட்டு வெளியேறும் நிலையில் மூன்றாவது வாரத்திலும் ரசிகர்களின் ஆதரவுடன் பல திரையரங்குகளில் ‘சாமானியன்’ படம் 25வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
இது பற்றி தயாரிப்பாளர் மதியழகன், “ தற்போது 25வது நாளை நோக்கி 10 திரையரங்குகளில் ‘சாமானியன்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
ராமராஜனுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்பதால் அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் பல திரையரங்குகளில் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ 50 சதவீத கட்டண சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.
படம் பார்த்த 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்திருக்கிறது. மற்றபடி புறநகரங்களில் எப்போதுமே ராமராஜனுக்கு இருக்கும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது.
ராமராஜனும் பல திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்துள்ளார். படம் வெளியாகி 21 வது நாளிலும் ரசிகர்கள் அதே பழைய ஆர்வத்துடன் தனது படத்தைப் பார்த்தது கண்டு வியந்து போய்விட்டார் ராமராஜன்.
படம் நிஜமான வெற்றி என்பதால் தான் இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்சஸ் மீட்டை கொண்டாடாமல் 25வது நாளில் இதன் வெற்றி விழாவைக் கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஆர்.ராகேஷ் கூறும்போது, “ராமராஜன் படத்தை சென்னைக்கு தெற்கே உள்ள நகரங்களில் பெண்கள் ஆர்வமாக தியேட்டர்களுக்கு வருவதை பார்க்க முடிகிறது. மேலும் பல கிராமங்களில் இருந்து ட்ராக்டர், மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கூட ‘சாமானியன்’ படம் பார்க்க ரசிகர்கள் வந்ததையும் பார்க்க முடிந்தது. பல ஊர்களில் இருந்தும் ராமராஜன் ரசிகர்கள் தினசரி என்னை தொடர்புகொண்டு எங்கள் அண்ணனை மீண்டும் எங்களிடம் அழைத்து வந்துவிட்டீர்கள் என கண்ணீர் மல்க கூறுவதை கேட்டபோது ஒரு நிறைவான படம் செய்த திருப்தி கிடைத்துள்ளது.
மதுரை, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ராமராஜன் திரையரங்குகளுக்கு நேரிலேயே சென்று படம் பார்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விரைவில் 25வது நாள் விழா கொண்டாட இருக்கிறோம். அது மட்டுமல்ல கட்டண சலுகையை அறிமுகப்படுத்தி இருப்பதால் 50வது நாள் விழா கொண்டாடும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.
கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடித்திருக்கின்றனர்.
முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
அமித் ஷா, அண்ணாமலைக்கு நாடார் சங்கங்கள் கண்டனம்: தமிழிசையின் அடுத்த திட்டம் என்ன?
விவசாயிகள் ஏரி – குளங்களில் கட்டணமின்றி மண் எடுத்துக்கொள்ளலாம்: முதல்வர் உத்தரவு!