கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் அருகே பையனூர் பண்டிதமேடு பகுதியில் நடந்த கார் விபத்தில் 5 பெண்கள் பலியானார்கள்.
விபத்து நடந்த பகுதியின் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் ஐந்து பேர் திருப்போரூரில் இருந்து மகாபலிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த யசோதா, கௌரி, அந்தாயி, லோகம்மாள், விஜயா ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் அமர்ந்து மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.
கழுவேளி நிலத்தில் மாடுகளை விட்டுவிட்டு அவற்றை பார்த்தவாறு, சாலையோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாய்ந்து வந்த கார் சில வினாடிகளில் இவர்கள் மீது மோதியதில் 20 அடி தூரத்துக்கு வீசப்பட்டனர். சிலர் காருக்கு அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். இதனால் பண்டிதமேடு கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
விபத்தில் இறந்த 5 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, 5 ஆம்புலன்ஸ்களில் இன்று (நவம்பர் 28) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
மாடு மேய்க்க போனவர்கள் உடலாக ஆம்புலன்ஸில் வந்ததை பார்த்து கிராம மக்களும் அவர்களது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இந்த விபத்தை பற்றி பண்டிதமேடு கிராம மக்களிடம் விசாரித்தோம்…
திருப்போரூரில் இருந்து வந்த ஸ்கோடா கார் – TN-11-j-7270, விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டருக்கு முன்னதாகவே இரு சக்கர வாகனத்தில் வந்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த முருகன் மீது மோதியிருக்கும். அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
100 முதல் 120 கிமீ வேகத்தில் காரை ஓட்டி வந்தனர். எங்கள் வீட்டு பெண்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். அவர்களை எங்கள் கிராம இளைஞர்கள் தான் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்று பிடித்தனர்.
அப்போது காரில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். வண்டியை ஓட்டி வந்த ஜோஸ்வாவும், அவரது நண்பர் தாகீர் அகமதுவும் மாட்டிக்கொண்டனர். அவர்களுக்கு தர்ம அடிகொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தோம்” என்றனர்.
போலீசார் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களிடம் விசாரித்த போது, “திருப்போரூர் சென்று ஜூஸ் சாப்பிட்டுவிட்டு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது என்ன நடந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை” என்று கூறியிருக்கின்றனர்.
நீங்கள் மது குடித்திருக்கிறீர்களா என்று போலீஸ் கேட்க, “நாங்கள் ஏற்கனவே மது அருந்தியிருந்தோம்” என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து அவர்கள் மீது (குற்ற எண் 504/2024) சட்டப்பிரிவு 281, 105, பிஎன்எஸ் 2023 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினரை பற்றி நாம் விசாரித்தோம்…
“பொதுவாகவே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசிக்கும் அனைத்து சாதியினரும் ஆடு மாடுகள் அதிகமாக வளர்க்க கூடியவர்கள். பண்டிதமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டுக்கு வீடு மாடுகள் வைத்துள்ளனர்.
அவை பெரும்பாலும் நாட்டு மாடுகள் தான். இந்த நாட்டு மாடுகள் பாலுக்குதான் அதிக விலையுண்டு. இறந்துபோன 5 பேரின் வீடுகளிலும் 20 முதல் 50 மாடுகள் வைத்திருக்கின்றனர்.
பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாமியின் மனைவி யசோதா(52). இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டதால், யசோதாவும், கோவிந்தசாமியும் தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது யசோதா இறந்துவிட்டதால் கோவிந்த சாமி தனிமரமாய் நிற்கிறார்.
குப்பன் மனைவி கௌரி(62) தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், குப்பனும் கௌரியும் மாடு மேய்த்து, பால் கறந்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தனர்.
சின்னராசு மனைவி லோகம்மாள்(65). சின்னராசு ஏற்கனவே இறந்துவிட்டார். லோகம்மாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
சாமிநாதன் மனைவி விஜயா(65). இந்த தம்பதியினருக்கு 2 ஆண் பிள்ளைகள் உட்பட 5 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. விஜயா கணவரும் இறந்துவிட்டார்.
முத்து மனைவி அந்தாயி (71).இந்த தம்பதியினருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும். திருமணமாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அந்தாயி கணவர் ஏற்கனவே விபத்தில் சிக்கி நடக்கமுடியாதவராக இருக்கிறார். அவரை அந்தாயிதான் கவனித்துக்கொண்டு வந்தார்.
தற்போது 5 பெண்களை இழந்து அவர்களது குடும்பமே நிற்கதியாய் நிற்கிறது” என்றனர் பண்டிதமேடு கிராம மக்கள்.
யசோதாவின் கணவர் கோவிந்த சாமி கூறுகையில், “என் பொண்டாட்டி யசோதா எனக்கு மதியம் சாப்பாடு போட்டுவிட்டு கவுரியுடன் சேர்ந்து மாடு ஓட்டி வந்தாள். ஒரு மணி நேரம்தான் ஆனது அதுக்குள்ள இப்படி ஒரு செய்தி வந்துவிட்டது” என்றார் வேதனையுடன்.
அந்த பகுதி பெண்கள் கூறுகையில், “அய்யா… துண்டு துண்டாக உடல்கள் கிடந்தன. கை, கால், தலையெல்லாம் துண்டாகியிருந்தது. அந்த 5 பேரும் எப்போதும் ஒன்னாதான் போவாங்க… ஒன்னாதான் வருவாங்க… அவர்களது வாழ்க்கையும் ஒன்னாவே முடிஞ்சு போச்சு” என்கின்றனர் கண்ணீர் மல்க.
உயிரிழந்த விஜயாவின் உறவினர் கூறுகையில், “நான் இங்கிருந்து போகும்போது தான்… எதிரில விஜயா தாங்கி தாங்கி நடந்து வந்தாங்க. என்னாச்சுமானு கேட்டேன். கால் வலிக்குதுனு சொன்னாங்க. நான் கையில் வைத்திருந்த மாங்காவை எடுத்துக்கோங்கமானு கொடுத்தேன். வேணாம்னு சொல்லி, சின்னதா ஒன்னு எடுத்துட்டு போனாங்க… 5 நிமிஷம் கூட ஆகல… அவங்க இறந்துட்டாங்கனு என் தங்கச்சி போன் பன்னா” என்றார் வேதனையுடன்.
அந்தாயியின் மகன் சதீஷ்குமார் தான் தற்போது விபத்தை ஏற்படுத்தியவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். இறந்தவர்கள் 5 பேரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, பண்டிதமேடு பகுதியில் உயிரிழந்த 5 பேருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார்.
-வணங்காமுடி, பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா வரவில்லையென்றால்… பிரம்மாஸ்திரதை கையில் எடுத்த பாகிஸ்தான்!
மலேசியாவின் அடையாளம்… தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மறைவு : யார் இவர்?
‘அசைவம் சாப்பிடாதே’ – பெண் விமானி உயிரை மாய்க்க காரணம் என்ன?
7 நாட்களில் 4 கோவில்கள்…ஜோதிகா மனமாற்றத்துக்கு குடும்ப ஜோதிடர் காரணமா?