சோகத்தில் முடிந்த வான் சாகசம் : 250 பேர் மயக்கம்…5 பேர் பலி – மருத்துவர் சொல்வது என்ன?

Published On:

| By Kavi

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்திருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படை சார்பில் நேற்று (அக்டோபர் 6) சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரஃபேல், தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சி காலை 11 மணி தொடங்கி மதியம் ஒரு மணி வரை வெயில் நேரத்தில் நடைபெற்றதால் கூட்டத்துக்கு வந்த பலரும் சோர்வடைந்தனர். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டதையும் காண முடிந்தது. பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

இவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் 250 பேர் மயங்கி விழுந்ததாகவும் அவர்களில் தற்போது 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 34 வயது நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினாவுக்கு வந்து வான்சாகச நிகழ்ச்சியை பார்த்து ரசித்தார். பின்னர் வீட்டிற்கு திரும்ப பைக்கை எடுக்க முயன்ற போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயன் உயிரிழந்தார்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), தனது குடும்பத்தினருடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வருகை தந்தார். இந்நிலையில் மெரினா நீச்சல் குளம் அருகே மயக்கம் அடைந்த அவரை மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

பெருங்களத்துரைச் சேர்ந்த சீனிவாசன் (48), தனது மகளுடன் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தார். காமராஜர் சாலை பார்த்தசாரதி கோயில் ஆர்ச் அருகே மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவர் நாள்பட்ட சிறுநீரக நோயாளி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆந்திராவை சேர்ந்த தினேஷ் குமார் (30), நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற போது மெரினா போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மணி (55) ஜெயலலிதா நினைவிடம் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், “இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். கடுமையான வெப்ப தாக்குதலால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்புக்கான காரணம் எங்களுக்கு தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள் பல வகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹை ரிஸ்க் நோயாளிகளாக இருந்திருக்கலாம். அல்லது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்,   “எங்களிடம் மயக்கம் காரணமாக 43 பேர் சிகிச்சை பெற்றனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது பல உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸ் சரியாக இயங்காது. இது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும். சிலர் சீரற்ற இதயத்துடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அரசு தொகுப்பு வீடு இடிந்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதி!

வேலைவாய்ப்பு : ஆர்பிஐ வங்கியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share