நாம் பொதுவாக வெளியில் அலையும்போது நம் முகம், கை, கால்களில் கருமை நிறமாக படியும். வெயில் தாக்கத்தினால் இது ஏற்படுத்துகிறது. வெயில் படாமல் உடலை பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. அது உடலுக்கு ஆபத்தும் கூட. ஆனால் வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க (d-tan)வழிகள் உள்ளன. அதிக சூரிய ஒளி படுவதால் ஏற்படும் சரும நிற மாற்றத்தைத் தவிர்த்து, சருமத்தின் பொலிவை மீட்டெடுக்கவும், இறந்த செல்களை நீக்கவும் இது உதவுகிறது. முகத்தில் இருந்து டீ-டேன் நீக்குவதற்காக வீட்டிலேயே செய்யக்கூடிய ஐந்து பேஸ் பேக்குகளைப் பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் பூசவும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகம் பொலிவுறும்.
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே கருமையை போக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல அரைக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் பூசிக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவை முகத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதோடு முகத்தை பளபளப்பாக்கும்
தக்காளி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
கடலை மாவு மற்றும் தக்காளி சமையல் செய்வதற்கு மட்டுமல்ல நம் முகத்திற்கும் நல்லது. தக்காளியை அரைத்து, ஒரு கிண்ணத்தில் சாறாக பிழிந்து கொள்ளவும். அதில் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்:
ஒரு கிண்ணத்தில் வெள்ளரி சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை கலக்க வேண்டும். அந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும். இது முகத்திற்கு ஈரப் பதத்தை தருவதோடு சருமத்தில் உள்ள தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது
பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:
பால் மற்றும் மஞ்சளை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கவும். உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு தண்ணீர் கழுவினால் முகம் மென்மையாகும், பளபளப்பாக மாறும்.
நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை டி டான் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் சருமம் என்றால் எரிச்சலைத் தவிர்க்க எந்த ஃபேஸ் பேக்கையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்த பிறகு முகத்தில் தடவவும்.
வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். எப்போதும் SPF 30 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்லும்போது உங்கள் முகத்தை தொப்பி, துணிகளை வைத்து மூடி கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருக்க முடியும், தோல் சேதமடையும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. இனி உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.
