உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 27 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 27 மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாகத் தேர்தல் பறக்கும் படை உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளது
இந்நிலையில், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ஆம் தேதி அன்றும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருச்சி, சேலம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
