தோனிக்கு பத்மபூஷன்!

Published On:

| By Balaji

இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தகுதியான நபர்களின் பெயர்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

மகேந்திரசிங் தோனி இதுவரை 90 டெஸ்ட், 302 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். 100 ஸ்டெம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர், தனது 100 வது அரைசதத்தை சமீபத்தில் பூர்த்தி செய்து சாதனைப் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் படைத்த கேப்டன்கள் பட்டியலில் 199 போட்டிகளில் கேப்டனாக விளையாடி, 110 போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இளம் இந்திய அணியைக் கொண்டு வெற்றிகரமாக கோப்பையைக் கைப்பற்றினார். அதன்பின்னர் 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோனியின் தலைமையில் சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும், இவர் தலைமையில் 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.சி.சி.யின் அனைத்துக் கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் ஆகியுள்ளார் தோனி.

2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனியைத் தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்காக பிசிசிஐ பரிந்துரை செய்யவில்லை. இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கும் பட்சத்தில் இந்த விருதைப் பெறும் 11 வது கிரிக்கெட் வீரர் என்கிற பெயரையும் அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share