45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது.
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
கேரளா சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், விளையாட்டின் ‘செமி பைனல்’ ஆட்டம் போல பார்க்கப்படுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு எதிராக காங்கிரஸ் முன்னணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
ஆளும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் முன்னணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி உள்ளது. 45 ஆண்டுகாலம் திருவனந்தபுரம் மாநகராட்சி இடதுசாரிகள் வசம் இருந்தது. தற்போது முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகராட்சியின் பாஜக மேயர் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஆர். ஸ்ரீலேகா பெயர்தான் அதிகம் அடிபடுகிறது.
தற்போது 64 வயதாகும் ஸ்ரீலேகா, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கேரளா காவல்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றினார்; சிபிஐ-ல் பணியாற்றினார். 2017-ல் கேரளா டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். கேரளாவின் முதலாவது பெண் டிஜிபி என்ற பெருமையையும் பெற்றார் ஸ்ரீலேகா.
2020-ல் தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்றார். தமது பணி காலத்தில் பாரபட்சமே இல்லாமல் முறைகேடு புகார்களுக்கு உள்ளான இடங்களில் ரெய்டுகளை நடத்தியவர் ஸ்ரீலேகா. அதனால் ‘ரெய்டு ஸ்ரீலேகா’ எனவும் அழைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தற்போது சாஸ்ம்தாமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பு ஸ்ரீலேகாவுக்கே அதிகம் என கூறப்படுகிறது. ஆனால், பாஜக மேலிடம்தான் இது பற்றி முடிவெடுக்கும் என்கிறார் ஸ்ரீலேகா.
வி.வி.ராஜேஷ்-க்கு வாய்ப்பு?
அதே நேரத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவர் வி.வி.ராஜேஷ், மேயராக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கின்றன அக்கட்சி தகவல்கள். கொடுங்கானூர் வார்டில் போட்டியிட்டு வென்றவர் வி.வி.ராஜேஷ்.
